சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை அணி.
ஐ.பி.எல் 2024:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 28) நடைபெறும் 46 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன.
அதிரடி காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்:
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்க்யா ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினார்கள். இதில் 12 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ரஹானே 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். மறுபுறம் அதிரடி காட்டிக்கொண்டிருந்தார் ருதுராஜ் கெய்க்வாட்.
ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார் டேரில் மிட்செல். இவர்களது ஜோடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வேகமாக ரன்களை சேர்த்துக் கொடுத்தது. இருவரும் தங்களது அரைசதத்தை பதிவு செய்தனர். அப்போது டேரில் மிட்செல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 32 பந்துகள் களத்தில் நின்ற டேரில் மிட்செல் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என 52 ரன்களை குவித்தார். இதனிடையே இந்த சீசனில் 400 ரன்களை கடந்த முதல் கேப்டன் என்ற பெருமையை படைத்தார் ருதுராஜ் கெய்க்வாட்.
அந்தவகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக சதம், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக அரைசதம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் விளாசிய நிலையில் இன்றைய போட்டியிலும் அரைசதம் விளாசினார் ருதுராஜ்.
பின்னர் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார் சிவம் துபே. இவரும் தன்னுடைய பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே இந்த ஐ.பி.எல் சீசனில் தன்னுடைய இரண்டாவது சதத்தை பதிவு செய்வார் ருதுராஜ் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 54 பந்துகள் களத்தில் நின்ற 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என 98 ரன்கள் எடுத்தார். சிவம் துபே 39 ரன்கள் எடுக்க இவ்வாறாக சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் எடுத்துள்ளது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.