மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள 17வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத சென்னை சேப்பாக்கத்தில் களமிறங்கியது. 17வது சீசன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசைவிருந்துடன் தொடங்கியது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற   பெங்களூரு அணி  பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கியுள்ளார். இது மட்டும் இல்லாமல் இதுவரை சென்னை அணியின் கேப்டனாக இருந்து வந்த மகேந்திர சிங் தோனி இந்த போட்டியில் வீரராக களமிறங்குகின்றார். 


சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண சென்னை மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும், உலகின் பல நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனிதான். இவரின் தீவிர ரசிகர்களால் சென்னை சேப்பாக்கம் மைதானம் மஞ்சள் படையால் நிரம்பி வழிகின்றது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரேயொரு போட்டி மட்டும் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது.  அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சேப்பாக்கத்தில்  உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்துல் எட்டு போட்டிகளில்  விளையாடியுள்ளது. இதில் சென்னை 7 போட்டிகளிலும், பெங்களூரு 1 போட்டியிலும் வென்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆவல் அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. 


இரு அணிகளும் கடந்த சீசனில் இரு அணிகளும் ஒருமுறை மட்டுமே மோதிக்கொண்டது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), கர்ன் சர்மா, அல்சாரி ஜோசப், மயங்க் டகர், முகமது சிராஜ்


சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே