ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்தவகையில்  ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 2) ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர்.


முன்னதாக நடப்பு சீசனின் ஐ.பி.எல் அட்டவணை 15 நாட்களுக்கானது மட்டுமே வெளியானது. இந்தியாவில் பொது தேர்தல் நடக்கும் ஆண்டு என்கிற காரணத்தினால், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தேவைகளால், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை வெளியிட்ட பிறகு, அதற்கேற்றவாறு இரண்டாவது கட்ட ஐபிஎல் தொடர் அட்டவணையை வெளியிட பிசிசிஐ முடிவு செய்திருந்தது.


இந்த நிலையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஐ.பி.எல் சீசனில் இறுதி அட்டவணை வெளியானது. அந்த வகையில் மே 19 ஆம் தேதி லீக் போட்டிகள் முடிவடையும் என்றும் இறுதிப் போட்டி மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்றும் கூறப்பட்டிருந்தது. 


இரண்டு போட்டிகள் தேதி மாற்றம்:






இந்நிலையில் தான் இந்த அட்டவணையில் இரண்டு போட்டிகளுக்கான தேதியை பிசிசிஐ மாற்றியுள்ளது. மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த தேதி மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி விளையாடுவதாக இருந்த போட்டி, ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.


அதேபோல், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ்  அணிகள் ஏப்ரல் 16ஆம் தேதி மோதிக் கொள்ள இருந்த போட்டி ஏப்ரல் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.