ஐபிஎல் 2024 சீசன் 17 சிறப்பாக நடந்து கொண்டிருக்கும்போதே, அடுத்த ஐபிஎல் போட்டிக்கான அப்டேட்களை அடுக்க தொடங்கிவிட்டது பிசிசிஐ. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களின் முக்கியக் கூட்டத்தை அகமதாபாத்தில் வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி கூட்டுகிறது பிசிசிஐ. இந்தக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மெகா ஏலம் குறித்தும், வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் விதிமுறைகள் குறித்தும் விவாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் குறித்து இந்த விவாதம் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.


யார் யார் பங்கேற்கிறார்கள்..?


இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அப்போது, இந்த கூட்டத்தில் அணியின் உரிமையாளர்கள், தங்கள் அணியிம் CEO மற்றும் மற்ற குழுவுடன் வரலாம் என்று கூறப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் அதே நாளில் இந்த சந்திப்பு நடைபெறுவது சுவாரஸ்யமான விஷயம்.


இந்த சந்திப்பு ஏன் நடக்கிறது..? 


கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் வெளியான தகவலின்படி, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மெகா ஏலமே முக்கிய விவாதமாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான விதிகள் மற்றும் அடுத்த சீசனுக்கான அணியை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படலாம்.


பிசிசிஐ அடுத்த சீசனுக்கான தக்கவைப்பு கொள்கை குறித்தும் பேசலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மெகா ஏலத்தில், ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே வைத்திருக்க முடிந்தது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஒரு சில அணிகள் கடந்த ஆண்டே கோரிக்கை வைத்தனர். எனவே இந்த கூட்டத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வாய்ப்பு உள்ளது.


மொத்தத்தில், ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஐபிஎல் போட்டியை மேலும் பரபரப்பாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


என்னென்ன கோரிக்கைகள் வைக்க வாய்ப்பு..?


ஐபிஎல்லில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தாண்டு இறுதியில் ஐபிஎல் 2025 க்கு முன் ஒரு மெகா ஏலம் ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இதற்கு முன் மெகா ஏலம் 2022 ம் ஆண்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில், தக்கவைத்துள்ள வீரர்களின் எண்ணிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம். இந்த பிரச்சினையில் வெவ்வேறு உரிமையாளர்கள் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உதாரணத்திற்கு,  ஐபிஎல் உரிமையாளர்களில் ஒரு பகுதியினர் தக்கவைப்பு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், தக்கவைக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை எட்டு வரை அதிகரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.


மறுபுறம், மெகா ஏல 2025 க்கு முன் அணியின் பண மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அணி உரிமையாளர்கள் முன்வைக்க இருக்கின்றன. கடந்த மினி ஏலத்திற்கு முன், அனைத்து அணிகளுக்கும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இம்முறை அது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.