ஐபிஎல் 2024 சீசனுடன் எம்.எஸ். தோனி கிரிக்கெட் வாழ்க்கைக்கு டாடா காட்டிவிடுவார் என்று பலரும் கூறிவருகின்றனர். ஒருவேளை தோனி அப்படி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றால் அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் கேப்டனாக பதவி வகிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, இந்த சீசனில் கேப்டன் கூல் எம்.எஸ்.தோனி கேப்டனாக இருக்க மாட்டார். இதன் காரணமாக, வேறொரு வீரர் சிஎஸ்கே கேப்டனாக செயல்படுவார் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2022 ஐபிஎல் சீசனில் மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அந்த சீசனில் சென்னை அணி சிறப்பாக செயல்படவில்லை. இதையடுத்து, எம்.எஸ். தோனி மீண்டும் கேப்டனாக பதவியை ஏற்று கொண்டார்.
தனிப்பட்ட முறையில் அவர் கேப்டனாக இருக்க வேண்டும்:
இம்பேக்ட் வீரர் விதியால் மகேந்திர சிங் தோனி தனது அணியின் கேப்டன் பதவியை வேறு சிலருக்கு கொடுத்துவிட்டு வீரராக விளையாடலாம் என்று அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றத்தின் சீசனாக இருக்கும். இது தவிர எம்.எஸ். தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம். இருப்பினும், கேப்டன் கூல் அடுத்த சில சீசன்களில் விளையாட விரும்பினால், ஒருவேளை கேப்டன்சியில் எந்த மாற்றமும் இருக்காது. தனிப்பட்ட முறையில், எம்.எஸ்.தோனி கேப்டனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ மகேந்திர சிங் தோனி 10 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்தாலும், காயங்களுடன் விளையாடுவார். கடந்த சீசனிலும் தோனி காயத்துடன் போராடினார். எனவே, இந்த முறையும் அவர் சீசன் முழுவதும் விளையாடுவார் என்று நம்புகிறேன்.” என்றார்.
கடந்த சீசனில் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது. இம்முறை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனாக களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் 2024 சீசன் மார்ச் 22 முதல் தொடங்குகிறது. இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்குகிறது. இரு அணிகளும் மோதும் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகிறது.
இந்த முறை அரைசதம் வருமா..?
ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் எம்.எஸ். தோனி, தனது கேப்டன்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸை 5 முறை சாம்பியனாக்கி, மொத்தம் 10 முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். தோனியின் தனிப்பட்ட ஐபிஎல் வாழ்க்கையைப் பார்த்தால், இன்றுவரை அவர் 250 போட்டிகளில் விளையாடி மொத்தம் 5,082 ரன்கள் எடுத்துள்ளார்.
தோனி இதுவரை 250 போட்டிகளில் விளையாடி இதுவரை 24 அரை சதங்களை அடித்துள்ளார். ஆனால் கடந்த சீசனில் அவரால் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியவில்லை. மகேந்திர சிங் தோனி 2024 ஆம் ஆண்டிலும் சிஎஸ்கே கேப்டனாக இருப்பார். தோனி இந்த முறையாவது ஒரு அரை சதமாவது அடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.