ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். தொடரில் எப்போதும் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. 5 முறை மகுடம் சூடிய அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, தோனியை பார்ப்பதற்காகவே சி.எஸ்.கே. ஆடும் போட்டிகளில் 7ம் எண் ஜெர்சி அணிந்த ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.


103 வயது சி.எஸ்.கே. ரசிகர்:


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என வயது வித்தியாசமின்றி சென்னை அணிக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், 103 வயதில் ஒரு முதியவர் சென்னை அணிக்கு மிகப்பெரிய ரசிகராக திகழ்வது சென்னை அணியின் மற்ற ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்து வருபவர் ராமதாஸ். அவருக்கு வயது 103.


1920ம் ஆண்டு பிறந்த இவர் அந்த கால பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிவர். அப்போது முதல் ஆங்கிலேயர்களுடன் இணைந்து கிரிக்கெட் ஆடிய இவருக்கு, கிரிக்கெட் மீது தீராத பிரியம் இருந்து வருகிறது. ஐ.பி.எல். தொடர் தொடங்கியது முதலே இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பரம ரசிகராக இருந்து வருகிறார். ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரின்போதும் தனது வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் ஆர்வத்துடன் கிரிக்கெட்டை பார்த்து ரசித்து வருகிறார்.






103 வயதிலும் நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடும் ஒவ்வொரு போட்டியையும் கண்டு ரசித்து வருகிறார். இவர் சென்னை அணியின் மீது கொண்ட தீராத பிரியத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் அவரிடம், டெல்லியில் நடக்கும் சென்னை போட்டியை காண போவீர்களா? என்று கேட்டபோது நான் நடந்தே போவேன் என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார்.


தோனியை பார்க்க ஆசை:


மேலும், செல்போனில் காட்டப்படும் சென்னை அணியின் பிரதான வீரர்களான தோனி, ஜடேஜா ஆகியோரின் புகைப்படங்களையும் பார்த்து மிகச்சரியாக கூறுகிறார். மேலும், தான் கிழவன் இல்லை என்றும், 103 வயது இளைஞர் என்றும் உற்சாகத்துடன் கூறினார்.


அவரிடம் தோனியை பார்க்கலாமா? என்று கேட்டபோது, அதற்கு அந்த முதியவர் அவன் கூப்பிட்டா போகலாம். அவன் எப்போ ஃப்ரீயா இருக்கானோ அப்போ போய் பாக்கலாம் என்று கூறினார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க: IPL 2024 Points Table: ஐதராபாத்தை அடிபணிய வைத்த பெங்களூரு அணி - ஐபிஎல் புள்ளிப் பட்டியல் நிலவரம் என்ன?


மேலும் படிக்க: IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல்‘’ராஜா’’! விராட் கோலி செய்த புது சாதனை! முழு விவரம் உள்ளே!