ஐபிஎல் தொடரின் 8வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று கவுகாத்தியில் உள்ள பராஸ்பரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், அந்த முடிவு ராஜஸ்தான் அணிக்கு சாதமாக அமையவில்லை.
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் பவர்பிளேயில் தங்கள் அணியை விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் அணிக்காக 10வது ஓவர் ஆடியபோது பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் சேர்த்து, ஹோல்டர் பந்துவீச்சில் ஜாஸ் பட்லரிடம் அவுட்டானார்.
ராஜஸ்தான் பந்துவீச்சாளர் ஆசிப் வீசிய ஓவரில் முதல் மூன்று பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை அடித்த பிரப்சிம்ரன் சிங், அதே ஓவரில் ஷார்ட் லெந்தில் வீசிய 4வது பந்தை, டீப் ஸ்கொயரில் பிளாட்டாக ஒரு சிக்ஸர் அடித்தார். இதன்மூலம், அவர் அனைவரையும் ஈர்த்தார். தொடர்ந்து, கடைசி பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்து அந்த ஓவரில் 18 ரன்களை சேர்த்தார்.
கொல்கத்தா அணிக்கு எதிராகவும் ஆதிக்கம்:
கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் விளையாடியபோதும் பிரப்சிம்ரன் சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ் மற்றும் டிம் சவுதி வீசிய பந்துகளை பிரப்சிம்ரன் சிங் ஷாட்களை அச்சமின்றி விளையாடினார். அன்றைய போட்டியில் 12 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர்களுடன் 23 ரன்களை சேர்த்தார்.
இப்படி ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்தும் பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் சிங் யார் என்று பார்த்துவிடுவோம்.
யார் இந்த பிரப்சிம்ரன் சிங்..?
22 வயதே பிரப்சிம்ரன் சிங் கடந்த 2019 ம் ஆண்டு முதல் பஞ்சாப் அணியில் இருந்து வருகிறார். இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக 6 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர், 64 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
காயம் காரணமாக ஜானி பேர்ஸ்டோவ் இல்லாத நிலையில், அவருக்கு பதிலாக பிரப்சிம்ரன் சிங் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தற்போது சரியாக பயன்படுத்தி வருகிறார்.
பிரப்சிம்ரன் சிங் உள்நாட்டு சாதனை:
பிரப்சிம்ரன் சிங் ஒரு வலதுகை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடி அற்புதமான சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை 11 முதல்தர போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 1 அரைசதங்களும்,24 லிஸ்ட் ஏ போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களும், 40 டி20 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்களும் அடித்துள்ளார்.
கடந்த 2022-23 சையத் முஷ்டாக் அலி டிராபியில், பிரப்சிம்ரன் சிங் 9 இன்னிங்ஸ்களில் 141 ஸ்டிரைக் ரேட் 4 அரை சதங்களுடன் 320 ரன்கள் எடுத்து மூன்றாவது முன்னணி ரன் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார்,
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு, பஞ்சாப் அணிக்காக விளையாடி பிரப்சிம்ரன் சிங் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்து அசத்தினார்.