ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 8வது போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. 

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தார். இருப்பினும் ராஜஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 


ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவினாலும் கேப்டன் சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் பல சாதனைகளை படைத்துள்ளார். அது என்னவென்று கீழே பார்க்கலாம். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சன் 1000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார். இது தவிர, ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்களை எடுத்த வீரராக இருந்த முன்னாள் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவை சாம்சன் முந்தியுள்ளார். கடந்த 2021 ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற சஞ்சு சாம்சன் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 118 போட்டிகளில் விளையாடி 18 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் உட்பட 3,138 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், அஜிங்க்யா ரஹானே 106 போட்டிகளில் விளையாடி 3,098 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ஷேன் வாட்சன் 84 போட்டிகளில் விளையாடி 2,474 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். 

அதிக ரன்கள்  ஆண்டுகள் போட்டிகள் இன்னிங்ஸ் ரன்கள் அதிகபட்ச ரன்கள் ஸ்ட்ரைக் ரேட் 100 50
சஞ்சு சாம்சன் 2013-2023 118 114 3138 119 137.99 2 18
அஜிங்க்யா ரஹானே 2011-2019 106 99 3098 105* 122.3 2 21
ஷேன் வாட்சன் 2008-2015 84 81 2474 104* 140.16 2 14
ஜோஸ் பட்லர் 2018-2023 60* 59 2377 124 152.07 5 15
ராகுல் டிராவிட் 2011-2013 52 51 1324 66 108.88 0 7
ஸ்டீவ் ஸ்மித் 2014-2020 50 43 1070 79* 126.92 0 8
யூசுப் பதான் 2008-2010 43 42 1011 100 161.24 1 6
ஸ்டூவர்ட் பின்னி 2011-2019 78 59 812 48* 132.67 0 0
பிரேட் ஹாட்ஜ் 2012-2014 38 33 748 54* 143.84 0 2
கிரேம் ஸ்மித் 2008-2010 25 25 697 91 112.96 0 4


கடந்த 2013 ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் அறிமுகமாகி, முதல் சீசனிலேயே அனைவரையும் ஈர்த்தார். இந்த சீசனில், ராஜஸ்தான் அணி 2008ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பிளே ஆப்க்கு முன்னேறியது. ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் இரண்டு ஆண்டுகள் ராஜஸ்தான் அணி தடை செய்யப்பட்டபோது, 2016-17 ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். 

தொடர்ந்து, 2018 ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், சாம்சனை மீண்டும் ராஜஸ்தான் அணி 8 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவரை வாங்க மும்பை இந்தியன்ஸ் அணியும் போராடியது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக கடந்த 2021ம் ஆண்டு சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, இவரது தலைமையிலான ராஜஸ்தான் அணி கடந்த ஆண்டு 2008ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றது.