கிரிக்கெட் எனும் வரலாற்றுப் புத்தகத்தை எழுத வேண்டுமென்றால், அதில் விராட்கோலி எனும் சகாப்தத்தை தவிர்க்க முடியாது. குறிப்பாக, இன்றைய நவீன கிரிக்கெட்டில் 3 வடிவ போட்டிகளிலுமே கிங்காக உலா வருபவர் விராட்கோலி. தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக நடைபெற்ற வாழ்வா? சாவா? போட்டியில் ஹைதரபாத் அணிக்கு எதிராக விராட்கோலி அடித்த சதம் ‘கிங் இஸ் ஆல்வேஸ் கிங்’ என்பதை நிரூபித்தது. 94 ரன்களுடன் களத்தில் விராட்கோலி நின்று கொண்டிருந்த தருணத்தில் புவனேஸ்வர் குமார் பந்தில் சிக்ஸர் சுவைத்து அசத்தினார். 


சத நாயகன் விராட்கோலி:


கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு சுமார் இரண்டரை ஆண்டுகள் சதமடிக்காமல் அவதிப்பட்டு வந்த விராட்கோலியை முன்னாள் ஜாம்பவான்கள் முதல் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். சிலர் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு கடந்தாண்டு ஆசிய கோப்பைக்கு திரும்பிய விராட்கோலி தான் யார்? என்பதை மீண்டும் நிரூபித்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து தன்னுடைய சத தாகத்தை தீர்த்துக்கொண்டார்.




அதன்பின்பு விராட்கோலிக்கு மீண்டும் ஏறுமுகம் என்றே கூறலாம். பழைய விராட்கோலியாக ஃபார்முக்கு திரும்பிய அவர் டி20 போட்டி மட்டுமின்றி ஒருநாள் போட்டியிலும் அதே ஆண்டு சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சதம் அடிக்கவில்லையே என்ற ஏக்கத்தையும் நடப்பாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் தீர்த்து 3 வடிவ போட்டிகளிலும் சதமடித்து தான் என்றுமே ஒரு ராஜா என்பதை நிரூபித்தார். இந்த நிலையில், நேற்று ஹைதரபாத் அணிக்கு எதிராக சதமடித்து ஐ.பி.எல். தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை கெயிலுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  


சிக்ஸர் மூலமே எட்டிய செஞ்சுரி:


ஒருநாள் போட்டி, டி20 போட்டி, ஐ.பி.எல். போட்டி என மூன்று வடிவ போட்டிகளிலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சதமடித்த விராட்கோலி, அந்த சதத்தை சிக்ஸர் மூலமே எட்டினார் என்பது அற்புதமான விஷயம். சதமே அடிக்கவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில், சுமார் 1021 நாட்களுக்கு பிறகு விராட்கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசி அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அந்த போட்டியிலும் சிக்ஸர் அடித்தே சதத்தை எட்டிப்பிடித்தார்.




பின்னர், ஒருநாள் போட்டியிலும் சதமடிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தபோது 1214 நாட்களுக்கு பிறகு சதம் விளாசினார். வங்காளதேச அணிக்கு எதிரான அந்த போட்டியில் சிக்ஸர் அடித்தே விராட்கோலி சதத்தை எட்டிப்பிடித்தார். 2019ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக ஐ.பி.எல். போட்டியில் சதமடித்திருந்த விராட்கோலி, அதன்பின்பு 1490 நாட்களுக்கு பிறகு நேற்று ஹைதரபாத் அணிக்கு எதிராக சதம் விளாசியுள்ளார். நேற்றைய போட்டியிலும் விராட்கோலி தன்னுடைய  சதத்தை சிக்ஸர் மூலமே எட்டி அசத்தியுள்ளார்.


ரசிகர்கள் மகிழ்ச்சி:


விராட்கோலி சதமடித்திருப்பது பெங்களூர் அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, உலகக்கோப்பை என்று இந்திய அணி சாம்பியன் கோப்பைகளுக்கான போட்டியை எதிர்கொள்ள உள்ளது. இந்த தருணத்தில் விராட்கோலி அசுர ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமையும்.


மேலும் படிக்க: Points Table IPL 2023: 4வது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு.. அடிசறுக்கிய மும்பை.. புள்ளி பட்டியல் நிலவரம் உங்களுக்காக!


மேலும் படிக்க: Virat Kohli Century: பேர கேட்டா விசில் அடி.. இது விராட் கோலி.. ஹைதராபாத்தை ஆட்டம் காண வைத்த ஆட்டநாயகன்..!