இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி சமன் செய்தார். 

ஐபிஎல் 2023 சீசனின் 65வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில்  நடைபெற்றது. 

முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் பேட்டிங்கில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி சார்பில் க்ளாசன் 51 பந்துகளில் 104 ரன்கள் எடுத்திருந்தார். 

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி சிறப்பான தொடக்கம் தந்தனர். ஃபாப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனர். 47 பந்துகளில் 71 ரன்கள் எடுத்திருந்த டு பிளெசிஸ், நடராஜன் வீசிய 18வது ஓவரில்தான் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 172 ரன்கள் சேர்த்திருந்தனர். தொடர்ந்து. 62 பந்துகளில் 100 ரன்கள் அடித்த விராட் கோலி, அடுத்த பந்தே அவுட்டானார். இதன்மூலம், ஐபிஎல் தொடரில் தனது 6வது சதத்தை பதிவு செய்தார். 

ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:

வீரர்கள் சதங்கள்
கிறிஸ் கெயில் 6
விராட் கோலி 6
ஜாஸ் பட்லர் 5
டேவிட் வார்னர் 4
ஷேன் வாட்சன் 4
கே.எல். ராகுல் 4
ஏபி டி வில்லியர்ஸ் 3
சஞ்சு சாம்சன் 3

நீண்ட நாட்களுக்கு பிறகு சிக்ஸர் மூலம் சதம்:

70 வது சதத்திற்கு பிறகு தனது 71வது சதத்தை விராட் கோலி எப்போது அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது 1021 நாட்களுக்கு பிறகு தனது சதத்தை பூர்த்தி செய்தார். 

தொடர்ந்து, 1214 நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் தனது சதத்தை சிக்ஸர் அடித்து பதிவு செய்தார். அதேபோல், 1490 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் தனது 6வது சதத்தை பூர்த்தி செய்தார். கடைசியாக கடந்த 2019 ஐபிஎல் தொடரில் தனது கடைசி சதத்தை பூர்த்தி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

6 சதங்கள்: 

விராட் கோலியில் நான்கு ஐபிஎல் சதங்கள் ஒரு சீசனில் வந்தவை. இவர் 2016 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 4 சதங்கள் உள்பட 973 ரன்களை குவித்தார். அவரது மற்றொரு சதம் 2019 வது சீசனில் பதிவானது. 

7500 ரன்கள்: 

ஐபிஎல் வரலாற்றில் 7500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி. முன்னதாக இதே சீசனில் 7000 ரன்கள் அடித்த பெருமையை படைத்தார் இவர்.