முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி ஐபிஎல் மற்றும் சர்வதேச அளவில் தனது பெயரில் பல்வேறு சாதனைகளை பதிவு செய்து வருகிறார். அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் புது சாதனையை இன்று படைத்துள்ளார். 


ஐபிஎல் வரலாற்றில் 600 பவுண்டரிகளை அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்துள்ளார். இந்த சாதனையானது பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இரண்டு பவுண்டரிகளை விரட்டி இந்த மைல்கல்லை எட்டினார். ஐபிஎல் தொடரில் கடந்த 2008 ம் ஆண்டு முதல் விளையாடி வரும் விராட் கோலி, இதுவரை 229 போட்டிகளில் விளையாடி, 603 பவுண்டரிகள் அடித்துள்ளார். 


இதற்கு முன்னதாக பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் 210 போட்டிகளில் விளையாடி 730 பவுண்டரிகளுடன் முதலிடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் 167 போட்டிகளில் 608 பவுண்டரிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளார். 


ஐபிஎல்-லில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள்:



  • ஷிகர் தவான் - 730

  • டேவிட் வார்னர் - 608

  • விராட் கோலி - 603

  • ரோகித் சர்மா - 535

  • சுரேஷ் ரெய்னா - 506

  • ராபின் உத்தப்பா- 481

  • ஏபி டிவிலியர்ஸ்- 413

  • கிறிஸ் கெயில் - 404

  • எம்.எஸ்.தோனி - 348


இது தவிர, இன்றைய போட்டியில் விராட் கோலி தனது 100 வது 30+ ஸ்கோரையும் அடித்துள்ளார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 100 30+ ஸ்கோர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் கோலி படைத்துள்ளார். 






அடுத்ததாக படைக்கவிருக்கும் சாதனை:


ஐபிஎல் தொடரில் விராட் கோலி 7000 ரன்களை எட்ட இன்னும் 97 ரன்கள் மட்டுமே உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைக்க இருக்கிறார். இந்த வாரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக களமிறங்குகிறது. இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினால் விராட் கோலி படைப்பார். 


பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் இலக்கு:


முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஃபாப் டு பிளிசி 84 ரன்களும், விராட் கோலி 59 ரன்களும் எடுத்திருந்தனர்.


தற்போது பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்களுடன் விளையாடி வருகிறது.