ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மதியம் 3. 30 மணிக்கு தொடங்கியது. 


பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவானும், பெங்களூரு அணி கேப்டன் ஃபாப் டு பிளிசியும் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. இவர்களுக்கு பதிலாக பஞ்சாப் அணிக்கு சாம் கரன் மற்றும் பெங்களூரு அணிக்கு விராட் கோலியும் தலைமை தாங்கினர். 


முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரன் பந்து வீச்சை தேர்வு செய்தனர். அதன் அடிப்படையில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக ஃபாப் டு பிளிசியும் (இம்பாட் வீரர்), விராட் கோலியும் களமிறங்கினர். 


இவர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட, பெங்களூர் அணி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. தொடர்ந்து ரன்கள் குவிய பெங்களூரு அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்தது. 


அதிரடியாக விளையாடிய டு பிளிசி அரைசதம் கடந்து அசத்த, விராட் கோலியும் தன் பங்கிற்கு 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினர். சாம் கரன் தான் உள்பட 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இவர்களது விக்கெட்களை வீழ்த்த முயற்சித்தார். இது எதுவுமே விராட் மற்றும் டு பிளிசியிடம் வேலைக்கு ஆகவில்லை. 


கிடைத்த பந்துகள் எல்லாம் எல்லை கோட்டுக்கு பறக்க, பெங்களூர் அணி 15 ஓவர்களில் 129 ரன்களை தொட்டது. சாம் கரன் வீசிய 15.3 வது பந்தில் டு பிளிசி கொடுத்த எளிய கேட்சை பஞ்சாப் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா தவறவிட்டார். தொடர்ந்து, 17வது ஓவரை வீச வந்த ஹர்பீரித் சிங், 59 ரன்களில் விராட் கோலிய காலி செய்ய, அடுத்த பந்தே மேக்ஸ்வெல்லும் தான் சந்தித்த முதல் பந்திலேயெ விக்கெட்டை இழந்தார். 


மறுமுனையில் டு பிளிசி அதிரடியாக விளையாடி எல்லீஸ் வீசிய 18வது ஓவரில் சிக்ஸர் அடித்து, அடுத்த பந்தே சாம் கரனிடம் 84 ரன்களிடம் கேட்சானார். பெங்களூரு அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. 


தொடர்ந்து களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் மற்றும் லாம்ரோர் தலா ஒரு பவுண்டரிகளை விரட்ட, அர்ஷ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் அதர்வாவிடம் கேட்சானார். சாம் கரன் வீசிய கடைசி ஓவரில் 4 லெக் பைஸுடன் தொடங்கி, மொத்தமாக 11 ரன்களை விட்டுகொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து, 175 ரன்கள் பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.