ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சன் ரைசர்ஸ் ஹைதரபாத்  அணி எதிர்கொள்கிறது. 


கடந்த மார்ச் 31 ஆம் தேதி குஜராத்தில் உள்ள அஹமதாபாத் மைதானத்தில் 16வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடக்கும் 10வது லீக் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஏய்டன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி லக்னோ அணியின் உள்ளூர் மைதானமான பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 


இந்த சீசனில் வெற்றி, தோல்வி: 


லக்னோ அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2வது ஆட்டத்தில் சென்னை அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் பேட்டிங், பந்துவீச்சில் சிறந்து விளங்கும் லக்னோ அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப ஆவலுடன் உள்ளது. கடந்த 2 போட்டியிலும் அந்த அணி வீரர் கைல் மேயர்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். மேலும் குயிண்டன் டி காக் வருகையால் நிக்கோலஸ் பூரன் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இருந்து கழற்றி விடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். 


அதேசமயம் ஹைதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் தன்னுடைய உள்ளூர் மைதானத்தில் ராஜஸ்தானிடம் 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த ஆட்டத்தில் கேப்டன் எய்டன் மார்க்ரம் விளையாடவில்லை. புவனேஸ்வர் குமார் தான் அணியை வழி நடத்தினார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜேன்சன் அணிக்கு திரும்பியுள்ளதால் கூடுதல் நம்பிக்கை வீரர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றிக்காக ஹைதராபாத் போராடும். 


இதுவரை நேருக்கு- நேர்: 


லக்னோ - ஹைதராபாத் அணிகள் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளது. கடந்தாண்டு நடந்த அந்த போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கே.எல்.ராகுல் 68 ரன்களை குவித்தார். இதனை மனதில் கொண்டு தோல்விக்கு பழி தீர்க்க ஹைதராபாத் அணி இப்போட்டியில் வெற்றி பெற போராடும் என்பதில் சந்தேகமே இல்லை. 


அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்)


லக்னோ அணி: கே.எல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், குயின்டன் டி காக், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கௌதம் , மார்க் வுட், ரவி பிஷ்னோய், ஜெய்தேவ் உனட்கட், ஆவேஷ் கான்


ஹைதராபாத் அணி: மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஏய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹாரி புரூக், கிளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், அடில் ரஷித், டி நடராஜன், உம்ரான் மாலிக்