கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணிக்காக ஹாரி ப்ரூக் மிரட்டல் சதம் அடிக்க, மார்க்ரம் அதிரடி அரைசதம் விளாச, அபிஷேக் மற்றும் கிளாசென் அதிரடியாக ஆடியதால் 229 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த தொடரிலே இதுவரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.


மிரட்டிய நிதிஷ்ராணா:


தொடக்க ஓவரிலே அதிரடி வீரர் குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஷ்வர் பந்தில் டக் அவுட்டாகினார். இதையடுத்து, களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். ஆனால் அவரும் ஜான்சென் பந்தில் 10 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே அதிரடிக்காக களமிறக்கப்பட்ட சுனில் நரைன்  கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். 20 ரன்களுக்குள் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்ததால் கே.கே.ஆர். ரசிகர்கள் சோகம் அடைந்தனர்.


அப்போது, கொல்கத்தா கேப்டன் நிதிஷ்ராணா – ஜெகதீஷ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாக தொடங்கி அதிரடியாக ஆடத் தொடங்கினர். உம்ரான் மாலிக் வீசிய பவர்ப்ளேவின் கடைசி ஓவரான 6வது ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசினார். இதனால், 6 ஓவர்களில் 60 ரன்களை எட்டியது.  மறுமுனையில் ஜெகதீசனும் அதிரடியாக ஆடினார். ஆனால் அவர் மார்கண்டே 21 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய அதிரடி வீரர் ரஸல் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.



இறுதிவரை போராடிய ரிங்குசிங்:


விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் கேப்டன் நிதிஷ்ராணா அதிரடியில் வெளுத்து வாங்கினார். அவருடன் கடந்த போட்டியின் சிக்ஸர் மன்னன் ரிங்குசிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர். இதனால், 16 ஓவர்களில் 159 ரன்களை கொல்கத்தா எட்டியது. கடைசி 22 பந்துகளுக்கு 64 ரன்கள் தேவைப்பட்டது. கொல்கத்தாவிற்காக அதிரடியில் மிரட்டிக் கொண்டிருந்த நிதிஷ்ராணா 40 பந்தில் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் நடராஜன் பந்தில் அவுட்டானார். ரிங்குசிங்குடன் அடுத்து ஜோடி சேர்ந்த ஷர்துல் தாக்கூரும் அதிரடியாக ஆடினார். கடைசி 18 பந்தில் வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டது. ரிங்குசிங் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசியதால் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். கடைசி 6 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டது.


கடைசி ஓவரில் கொல்கத்தா அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சன்ரைசர்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் நின்று போராடிய ரிங்குசிங் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 58 ரன்கள் விளாசினார். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


 


மேலும் படிக்க:  ABP Nadu Anniversary: சிறப்புமிக்க 3-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் ஏபிபி நாடு.. வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்


மேலும் படிக்க: Hardik Pandya Fined: பாண்ட்யாவிற்கு ரூ. 12 லட்சம் அபராதம்...! நடப்பு ஐ.பி.எல்.லில் 3வது கேப்டன்..! என்னதான் காரணம்..?