ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் கோப்பைக்காக களமிறங்கியுள்ளன.
கொரோனா காலமாக உள்ளூர் மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அணியும் தங்களது உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவதால் ரசிகர்கள் இந்த ஐபிஎல் திருவிழாவை கோலகலமாக்கி வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக மைதானம் முழுவதும் லக்னோ அணி ரசிகர்கள் குவிந்து காணப்பட்டனர்.
திணறிய ஹைதராபாத்:
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளில் டாஸ் வென்ற அணி பந்து வீச தான் முடிவு செய்தது. ஆனால் இம்முறை ஹைதராபாத் அணியின் கேப்டன் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய ஹைதராபாத் அணிக்கு தான் நினைத்தது போல் அமையவில்லை. பவர்ப்ளேவிற்குள் ஒரு விக்கெட்டை இழந்து 43 ரன்கள் சேர்த்து இருந்தது. பவர்ப்ளேவில் ஒரு விக்கெட் எடுத்த குர்னல் பாண்டியா வீசிய 8வது ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னர் ஹைதராபாத் அணி நிதானமாக ஆடி வரும்போது மீண்டும் ஒரு விக்கெட்டை இழக்க அப்போது அணியின் ஸ்கோர் 55 ரன்களாக இருந்தது. ஹைதராபாத் அணி சார்பில் பேட்டிங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மார்க்ரம் மற்றும் ப்ரூக் இருவரும் சொதப்பினர். ஹைதராபாத் அணி தரப்பில் ஒரு அணியாக அவர்கள் இணைந்து விளையாட இன்னும் சில காலம் எடுக்கும் என கூறலாம். இதற்கு முந்தைய போட்டியில் டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்து தோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
122 ரன்கள் டார்கெட்:
இதன் பின்னர் ஹைதராபாத் அணியால் மீளவே முடியவில்லை. இறுதியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணி சார்பில் குர்னல் பாண்டியா 4 ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவாக இருந்ததால், லக்னோ அணியின் 3 சுழற்பந்து வீச்சாளர்களும் தலா 4 ஓவர்கள் வீசினர். மற்றவர்கள் யாரும் 4 ஓவர்கள் வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.