ஐபிஎல் போட்டியின் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்தவர்கள் ஏராளம். ஆனால் அதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயமாக இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் அவ்வாறு இந்திய அணிக்குள் நுழைந்துள்ளனர் என்பது தான். இந்திய அணியில் விளையாடிய தமிழர்கள் சென்னை அணிக்காகவும் மற்ற அணிகளுக்காகவும் விளையாடியுள்ளனர்.
நடராஜன்:
அவ்வாறு சென்னை அணியில் இருந்து இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் என ஒரு சில பெயரினை நம்மால் கூற முடியும். ஆனால் அதற்கெல்லாம் காரணமாக கூறப்படுவது, சென்னை அணியின் கேப்டனாகவும் அப்போதைய இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தது மகேந்திர சிங் தோனி. தோனி தனது அணி என ஏற்கனவே தீர்மானித்த வீரர்களுடன் தான் லீக் போட்டி தொடங்கி ஐசிசி போட்டி வரை களமிறங்குகிறார் என விமர்சனங்கள் கூட வைக்கப்பட்டது.
அதே விமர்சனங்கள் சில சமயங்களில் விராட் கோலி மீதும், ரோகித் ஷர்மா மீதும் வைக்கப்பட்டது. இவர்களுடன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இந்திய அணிக்குள் நேரடியாக நுழைந்தவர்கள் பலர். அதேபோல் இவர்களுக்கு இடையில் உள்ள பனிப்போரினால் இந்திய அணிக்காக விளையாட முடியாதவர்களும் உள்ளனர். இப்படியான கம்ஃபர்ட் ஷோனுக்குள் கேப்டன்கள் மாறிவிட்ட போதும் கூட ஒரு சில திறமைகளை யாராலும் தட்டிக் கழிக்க முடியாது. அப்படியான திறமைக்குச் சொந்தக்காரர் தான் தமிழ்நாட்டின் வளர்ந்து வரக்கூடிய மாவட்டமான சேலத்தில் உள்ள குக்கிராமத்தில் இருந்து இந்திய அணிக்கு தகுதி பெற்ற நடராஜன்.
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்:
உலகமே உற்று நோக்கும் ஐபிஎல் போட்டியில் களமிறங்குவதென்பது கிட்டதட்ட சர்வதேச போட்டிகளுக்கு தயாராவதைப் போல் தயாராக வேண்டும். ஏனென்றால் களம் மிகவும் பரபரப்பாக இருக்கும். அப்படியான களத்தில் தான் விளையாடத் தொடங்கியது முதல் இன்று வரை அவர் மீதுள்ள எதிர்பார்ப்புக்கு மக்களிடத்தில் ஆர்வம் குறையவில்லை.
சன் ரைசஸ் ஹைதரபாத் அணி நிர்வாகத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அந்த அணி செய்த மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது நடராஜனை அடையாளம் கண்டு, அவரை சர்வதேச வீரராக உருவாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது தான். ஹைதராபாத் அணிக்காகவும் சரி இந்திய அணிக்காகவும் சரி டெத் ஓவர் மற்றும் யார்க்கர் வீசுவதில் நடராஜனைப் போல் இன்றைக்கு யாரும் இல்லை.
ஒற்றைத் தமிழன்:
இடது கை பந்து வீச்சாளரான இவர் ஹைதராபாத் அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறார். இவரால் ஹைதராபாத் அணி பல போட்டிகளில் வென்றுள்ளது. இதுவரை 36 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் இதுவரை மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது கிரிக்கெட் உலகமே பார்த்து மிரண்ட ஜாம்பவான் ஏபி டிவிலியர்ஸை தனது யார்க்கரால் வீழ்த்தியது தான். இன்றைய போட்டியில் களமிறங்கும் ஒற்றைத் தமிழன் நடராஜன் இன்றைக்கு தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.