ஐபிஎல் 2023 சீசன் தொடக்க விழாவில் பங்கேற்று பாடல் நிகழ்ச்சியை நடத்திய பாடகர் அர்ஜித் சிங் தோனியை கண்டதும் அவர் கால்களை தொட்டு வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.


கால்களை தொட்டு வணங்கிய அர்ஜித் சிங்


நேற்று (வெள்ளிக்கிழமை) பதினாறாவது இந்தியன் பிரீமியர் லீக் தொடக்க விழாவில் பிரபல பின்னணிப் பாடகர் அர்ஜித் சிங் பாடல் நிகழ்ச்சியை நிகழ்த்தினார். இந்த சீசனின் முதல் போட்டி எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. தொடக்க விழா முடிந்ததும், அந்தந்த அணி கேப்டன்கள் தொடக்க விழா கலைஞர்களை சந்தித்தனர். விழாவில் அர்ஜித்துடன் இணைந்து தமன்னா பாட்டியா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடனமாடியது குறிப்பிடத்தக்கது. தோனியும் அர்ஜித்தும் ஒருவரையொருவர் சந்தித்துப் பேச வந்தபோது, தோனியின் கால்களைத் தொட்டு அவருக்கு நன்றி தெரிவித்தார் அர்ஜித் சிங். தோனியும் அரிஜித்தை அணைத்துக்கொண்ட அந்த தருணம் உடனடியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 






சிஎஸ்கே பேட்டிங்


குஜராத் கேப்டன் ஹர்திக் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்த பிறகு தோனியின் சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியது. பவர்பிளேயில், தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வேயை சீக்கிரமாக ஆட்டமிழந்ததால், சென்னைக்கு தொடக்கத்திலேயே பெரும் அடி கிடைத்தது. இருப்பினும், ருதுராஜ் கெய்க்வாட் ஒரு முனையில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்தார். 10 ஓவர்கள் வரை கட்டுக்கோப்பாக ஆடிய சென்னை அணி, பின்னர் மெதுவாக விக்கெட்டுகளை இழக்கத் துவங்கியது. மொயீன் அலி விறுவிறுப்பாக விளையாடி 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து பவர்பிளேயின் இரண்டாவது கடைசி பந்தில் ரஷித் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த பேட்டர் பென் ஸ்டோக்ஸும் குறைந்த ரன்னுக்கு ஆட்டமிழக்க ரஷித் தனது இரண்டாவது விக்கெட்டைக் வீழ்த்தினார். 


தொடர்புடைய செய்திகள்: GT vs CSK IPL 2023: சென்னையின் வியூகங்களை சுக்குநூறாக்கி அபார வெற்றி பெற்ற குஜராத் அணி; இந்த சீசனின் முதல் வெற்றி..!


179 ரன் இலக்கு


குஜராத் தரப்பில் ரஷித், முகமது ஷமி, அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர், அதேசமயம் ஐபிஎல் அறிமுக வீரரான ஜோசுவா லிட்டில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதோடு நன்றாக பந்து வீசி அணிக்கு உதவினார். சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்தில், குஜராத்தின் தொடக்க ஆட்டக்காரர்களான விருத்திமான் சாஹா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் உறுதியான தொடக்கத்தை அளித்தனர், இருப்பினும், ராஜ்வர்தன் ஹங்கர்கேகரின் பந்துவீச்சில் சஹா ஆட்டமிழந்ததால், அவரது தொடக்கத்தை பெரிய ரன்னாக மாற்ற முடியவில்லை.






குஜராத் அணி வெற்றி


காயப்பட்ட வில்லியம்சன்னுக்கு பதிலாக, இம்பாக்ட் வீரராக வந்த சாய் சுதர்சன் மூன்றாவதாக இறங்கி, 22 ரன்கள் குவித்து சுமாரான பங்களிப்பை அளித்தார். பின்னர் கில் அதிரடியால் ஆரம்பத்தில் இருந்தே நல்ல நிலையில் இருந்த குஜராத் அணி அவர் ஆட்டமிழந்ததும் கொஞ்சம் தடுமாறியது. அந்த தடுமாற்றத்தை வெற்றியாக மாற்றும் முயற்சியில் போராடி தோற்றது சென்னை. விஜய் சங்கரும், தெவாட்டியாவும் ஒரு கட்டத்தில் செய்வதறியாது திக்குமுக்காடியபோது சென்னை ரசிகர்கள் படு உற்சாகத்தில் இருந்திருப்பார்கள். ஆனால் சிக்ஸ் அடித்து பின்னர் ஆட்டமிழந்த விஜய் ஷங்கருக்கு பின் வந்த ஆஃப்கன் நட்சத்திர வீரர் ரஷீத் இரண்டே பந்துகளில் ஆட்டத்தை மாற்றி தெவாட்டியா கையில் கொடுக்க அவர் கடைசி ஓவரில் சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து வெற்றிக்கான இலக்கை எட்டினார்.