ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து சுப்மன் கில் விலகியதாக செய்திகள் பரவி வருகிறது.


கடந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) 'வளர்ந்து வரும் சிறந்த வீரர்' சுப்மன் கில் விருது பெற்று அசத்தினார்.  21 வயதான சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி ஐபிஎல் 2022 பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். சமீபத்தில், இவர் ஜிம்பாவே அணிக்கு எதிரான தொடரில் இந்தியாவுக்காக சர்வதேச தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து, அந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 


இந்தநிலையில், சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகியதாக செய்திகள் பரவி வருகிறது. ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைகுரிய வகையில் சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது. அதன் மூலமாகவே குஜராத் அணியில் இருந்து கில் விலகுவதாக செய்திகள் வெளிவருகின்றன. 






அந்த ட்வீட்டில், “இது நினைவில் கொள்ள வேண்டிய பயணம். உங்கள் அடுத்த முயற்சிக்கு எங்களின் நல்வாழ்த்துகள்” என பதிவிட்டிருந்தனர். 






இதையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், ”மீண்டும் அணிக்கு வருக சுப்மன் கில்” என பதிவிட்டது, இதன் மூலம் அடுத்த ஆண்டு மீண்டும் கொல்கத்தா அணிக்கு விளையாடலாம் என்றும் கூறப்படுகிறது. 






இதைப்பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் “ என்ன நடக்கிறது இங்கு” என்றும், இது ப்ராங்க் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சுப்மன் கில் சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் நடித்ததற்காக மட்டுமே குஜராத் டைட்டன்ஸ் அணி வாழ்த்து தெரிவித்ததாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 


ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் : 


கடந்த சீசனில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் கில் சிறப்பாக விளையாடினார். ஐபிஎல் 2022 சீசனில் 132.33 ஸ்ட்ரைக் ரேட்டுடன் தனது அணிக்காக 16 போட்டிகளில் 483 ரன்கள் எடுத்தார்.


கடந்த 2018 ம் ஆண்டு அறிமுகமான சுப்மன் கில் இதுவரை 74 போட்டிகளில் 32.20 சராசரியுடன் மொத்தம் 1900 ரன்கள் எடுத்துள்ளார்.