ஐபிஎல் தொடரை 5 முறை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்த அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஜெயவர்தனே அந்தப் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு கோலபல் பெர்ஃபாமன்ஸ் இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீறர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆகாஷ் அம்பானி, “மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக மார்க் பவுச்சரை வரவேற்கிறோம். வீரராக களத்தில் அவருக்கு இருந்த அனுபவம் மற்றும் பயிற்சியாளராகவும் அவருடைய அனுபவம் மும்பை அணிக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். மும்பை இந்தியன்ஸ் அணியை இவர் மேம்படுத்துவார்” எனக் கூறியுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பாக மார்க் பவுச்சர், “மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். மும்பை அணியின் சாதனைகளை வைத்து பார்க்கும் போது உலகளவில் மிகவும் சிறந்த க்ளப் அணியாக திகழ்கிறது. இந்த அணியின் பயிற்சியாளராக என் முன் இருக்கும் சவால்களை நான் நன்கு அறிவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் கீப்பராக மார்க் பவுச்சர் செயல்பட்டு வந்தார். இவர் தென்னாப்பிரிக்கா அணிக்காக 147 டெஸ்ட் போட்டிகள், 295 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் இவர் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இவர் 11 டெஸ்ட், 12 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளார்.
முன்னதாக தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி களமிறங்க உள்ளது. அந்த அணியின் பயிற்சியாளர்கள் தொடர்பான அறிவிப்பை மும்பை அணி வெளியிட்டிருந்தது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சைமன் கட்டிச் தலைமைப் பயிற்சியாளராகவும், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஹசிம் ஆம்லா பேட்டிங் பயிற்சியாளராகவும் அணியில் இணைவார்கள் என்று மும்பை இந்தியன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல், நியூசிலாந்தின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜேம்ஸ் பாம்மென்ட் பீல்டிங் பயிற்சியாளராகவும், முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரும் உள்நாட்டு பயிற்சியாளருமான ராபின் பீட்டர்சன் அணியின் பொது மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.