ஐபிஎல் வரலாற்றில் 10வது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை, பஞ்சாபின் ஷிகர் தவான் மற்றும் மோஹித் ரதி ஆகியோர் பெற்றுள்ளனர். இந்த ஜோடி ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.


பஞ்சாப் - ஐதராபாத் மோதல்:


ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி, மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் அணி வீரர்கள், ஐதராபாத்தின் சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினார். இதனால் ஒட்டுமொத்தமாக 88 ரன்களை சேர்ப்பதற்குள்ளாகவே பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.


16 வருடங்களில் நடக்காத சம்பவம்:


ஒருபுறம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம் கேப்டன் தவான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 51வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதோடு 10வது விக்கெட்டிற்கு மோஹித் ரதி உடன் ஜோடி சேர்ந்து 30 பந்துகளில் 55 ரன்களை சேர்த்தார். 16 வருட ஐபிஎல் வரலாற்றில் 10வது விக்கெட்டிற்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பார்ட்னர்ஷிப்பில் மோஹித் மொத்தமே 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு, 1 ரன் மட்டுமே எடுத்தார். அதேநேரம், கேப்டன் தவான் 66 பந்துகளில் 99 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


முந்தைய சாதனை தகர்ப்பு:


முன்னதாக, கடந்த 2020ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய டாம் கர்ரன் மற்றும் அங்கிட் ராஜ்புத் ஆகியோர், கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசி விக்கெட்டிற்கு 31 ரன்களை சேர்த்து இருந்தனர். ஐபிஎல் வரலாற்றில் 10வது விக்கெட்டிற்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுதான் என சாதனையாக இருந்தது. அதனை தவான் மற்றும் மோஹித் ஜோடி தகர்த்துள்ளது.


தவான் படைத்த சாதனைகள்:


01. ரெய்னா, கிறிஸ் கெயில் மற்றும் மயங்க் அகர்வாலை தொடர்ந்து ஐபிஎல் வரலாற்றில் 99 ரன்களை சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நான்காவது வீரர் எனும் பெருமையை தவான் பெற்றுள்ளார்.


02. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக அரைசதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் வார்னரை (61)தொடர்ந்து தவான் (51) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.


03. ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதங்கள் விளாசிய இந்திய வீரர் எனும் கோலியின்(50) சாதனையை தவான் முறியடித்துள்ளார்.


04. ஐபிஎல் வரலாற்றில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ஒரே கேப்டன் எனும் பெருமையையும் தவான் பெற்றுள்ளார்.


ஆரஞ்சு தொப்பி:


அடுத்தடுத்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் தவான், இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 அரைசதங்கள் உட்பட 225 ரன்களை சேர்த்து ஆரஞ்சு தொப்பியை தனதாக்கியுள்ளார். அவரை தொடர்ந்து கெய்க்வாட் மற்றும் வார்னர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.