ஐபில் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


ஐபிஎல் 16வது சீசன்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில், புவனேஷ்வர் குமார் தலைமையிலான ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.


அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தென்னாப்ரிக்க வீரர் மார்க்ரம், நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருவதால் இன்றைய போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிபோட்டி வரை சென்ற ராஜஸ்தான் அணி, குஜராத்திடம் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை அந்த அணி நழுவவிட்டது. இதனிடையே, கடந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐதராபாத் அணி, புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தை பிடித்தது. இதனால், முதல் போட்டியிலேயே வென்று நேர்மறையான எண்ணத்தை பெற இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.


ஐதராபாத் அணி நிலவரம்:


 ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் இன்னும் அணிக்கு திரும்பாதது சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. அதேநேரம், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அன்மோல்பிரீத் சிங், ஹாரி ப்ரூக் ஆகிய இளம் வீரர்கள் பேட்டிங்கில் ஐதராபாத் அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். வழக்கமாக பந்துவீச்சில் பலமாக விளங்கும் ஐதராபாத் அணி, நடப்பு தொடரிலும் வலுவாகவே காணப்படுகிறது. புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக் என வேகப்பந்து மற்றும் சுழற்பந்துவீச்சில் எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.


ராஜஸ்தான் அணி நிலவரம்:


கடந்த முறை நூலிழையில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான், இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. அணியில் ஜாஸ் பட்லர், தேவ்தத் படிகல், ஹெட்மேயர், ஜெய்ஷ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் என அதிரடி பேட்ஸ்மேன்கள் நிறைந்து காணப்படுகின்றனர். அதோடு, ஜேசன் ஹொல்டர், அஷ்வின், ஜாம்பா, கரியப்பா, குல்தீப் சென், நவ்தீப் சைனி, சந்தீப் சர்மா, ட்ரெண்ட் போல்ட், சாஹல் என நட்சத்திர பந்துவீச்சாளர்களும் உள்ளனர். நடப்பு தொடரில் கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாக ராஜஸ்தான் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


நேருக்கு நேர்:


இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ள சூழலில், ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் தலா 8 முறை வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.