16வது ஐபிஎல் தொடரின் 4வது ஆட்டத்தில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் மைதான நிலவரம், ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தகூடிய வீரர்கள் விவரங்கள் பற்றி காணலாம்.
நடப்பாண்டுக்கான 16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலகமாக தொடங்கியது. இதில் இன்று நடக்கும் 2 ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டியானது மாலை 3.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கிறது. போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மைதானம் புள்ளி விபரம்
கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் போட்டியானது நடைபெறுகிறது. சொந்த மண்ணில் ஹைதராபாத் அணி அசைக்க முடியாத அளவுக்கு அபார சாதனை படைத்துள்ளது. அந்த அணி இங்கு விளையாடிய 44 போட்டிகளில் 29 போட்டிகளில் வெற்றியும், 14 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது.அதேமயம் ராஜஸ்தான் அணி இந்த மைதானத்தில் விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டில் வெற்றியும், நான்கில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை விட (7.75) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (8.08) சிறந்த சராசரி ரன் ரேட்டைக் கொண்டுள்ளது.
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரராக முன்னாள் ஹைதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் (1602 ரன்கள்) திகழ்கிறார். அதேபோல் பந்துவீச்சில் ஹைதராபாத் அணி வீரர் புவனேஸ்வர் குமார் (37) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹைதராபாத் அணியின் உள்ளூர் மைதானமாக ராஜீவ் காந்தி மைதானத்தில் ராஜஸ்தானுடன் விளையாடிய 3 போட்டிகளிலும் ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது கூடுதல் பலமாக உள்ளது.
அணியின் உத்தேச வீரர்கள் விவரம்:
ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மேயர், ரியான் பராக், ஆகாஷ் வசிஷ்ட், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், அஸ்வினும், ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் (கேப்டன்), அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், அகேல் ஹூசைன், உம்ரான் மாலிக், நடராஜன் இடம் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்கள் யார்?
ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் விதியை இரு அணிகளும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடி வருவதால் இன்றைய போட்டியில் புவனேஸ்வர் குமார் அணியை வழி நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணி பந்துவீசும் போது ஃபசல்ஹக் ஃபரூக்கி அல்லது லெக்ஸ்பின்னர் அடில் ரஷித் ஆகியோரை தேர்வு செய்யலாம். அதேபோல் பேட் செய்யும் போது அபிஷேக் ஷர்மாவை கூடுதல் பேட்ஸ்மேனாக அணியில் சேர்த்துக் கொள்ளும்.
இதேபோல் ராஜஸ்தான் அணியில் ஆகாஷ் வசிஷ்ட் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் சுழற்பந்து வீச்சையும் மேற்கொள்வார் என்பதால் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தால் இவர் பேட்டிங்கில் களமிறக்கப்படலாம். அதேசமயம் பந்துவீச்சில் குல்தீப் சென், நவ்தீப் சைனி மற்றும் சந்தீப் ஆகியோர் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக தேர்வு செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சீசனில் ஏற்பட்ட தோல்விக்கு ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை பழிவாங்க முயற்சிக்கும் என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக செல்லும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.