ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் சீசன்:


கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் கிரிக்கெட் திருவிழாவின் பல போட்டிகள் இறுதிவரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது.  பிளே ஆஃப் சுற்றுக்கு யார் யார் செல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கணிக்க முடியாத அளவில் உள்ளது. கிட்டதட்ட 4 அணிகள் 10 புள்ளிகளுடன் 4 இடத்திற்கு முட்டி மோதி வருகின்றன.


குஜராத் - ராஜஸ்தான் மோதல்


இப்படியான நிலையில் இன்று நடக்கும் 48வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தானில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் முடிவு செய்துள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டு களிக்கலாம். இன்றைய போட்டியில் வென்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் குஜராத் அணி களமிறங்குகிறது. அதேநேரம், நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் குஜராத் அணி இன்று களமிறங்குகிறது.


புள்ளிப்பட்டியல் விவரம்:


நடப்பு சீசனில் குஜராத் அணி 10 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதேபோல் ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால், ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்திற்கு முன்னேறக் கூடும்.


மைதானம் எப்படி? 


ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 49 போட்டிகள் நடந்துள்ளன. இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 32 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி அதிகப்பட்சமாக 202 ரன்களை எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி குறைந்த ஸ்கோராக 92 ரன்களை பதிவு செய்துள்ளது. அதேசமயம் சவாய் மான்சிங் மைதானத்தில் இந்த இரு அணிகளும் முதல்முறையாக நேருக்கு நேர் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.