IPL 2023: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பந்து வீச்சாளர்களான நடராஜன் மற்றும் வருண் சக்ரவர்த்தி டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசியுள்ளனர். 


ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி உலககெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கோலகளமாக்கி வருகிறது. உலகமே உற்று நோக்கும்  இந்த தொடரில் விதிமுறைகளின் படி ஜாம்பவான்கள் கூட பெவிலியனில் அமர்ந்து போட்டியை பார்ப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கிடைக்கும் வாய்ப்பினை மிகச்சரியாக பயன்படுத்து தங்களையும் தங்களைது அணியையும் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் வீரர்களும் இருக்கிறார்கள். 


அப்படியான வீரர்கள் இருவரைப் பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம். அவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியின் அதிவேகப் பந்து வீச்சாளர் நடராஜன். மற்றொருவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி. இருவரும் வளர்ந்து வரும் நட்சத்திர பந்து வீச்சாளார்கள். நேற்று ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியும் நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால், இரு அணி வீரர்களும் கிட்டத்தட்ட உயிரைக் கொடுத்து விளையாடினார்கள். போட்டி கடைசி பந்து வரை சென்றாலும், கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது. 


இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற முக்கிய காரணம், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தான். மொத்தம் 4 ஓவர்கள் பந்து வீசிய அவர், அதில் இரண்டு ஓவர்கள் டெத் ஓவர் எனப்படும் (17வது ஓவரில் இருந்து 20வது ஓவர் வரை) இறுதி 4 ஓவர்களில் இரண்டு ஓவர்கள் அவர் வீசினார். 18வது ஓவரை வீசிய வருண் அதில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேபோல் இறுதி ஓவரில் ஹைதராபாத் அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் வருண் சக்ரவர்த்தி அந்த ஓவரில் ஒரு விக்கெட் கைப்பற்றியதுடன் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார். 


அதேபோல் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது, 18வது மற்றும் 20வது ஓவரை நடராஜன் வீசினார். அதில், 18வது ஓவரில் ஒரு விக்கெட் கைப்பற்றி 7 ரன்கள் விட்டுக்கொடுத்த நடராஜன் 20வது ஓவரில் மூன்று ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதில் ஒரு விக்கெட் நடராஜனால் ரன் - அவுட் முறையில் கைபற்றப்பட்டது. 


இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடியிருப்பது தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


.