விறுவிறுப்பான ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றது. 


முடிவுக்கு வந்த லீக் போட்டிகள்


ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. கடந்தாண்டைப் போல நடப்பாண்டும் சென்னை, மும்பை, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத், லக்னோ, பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 10 அணிகள் பங்கேற்றன. கடந்த ஒன்றரை மாதங்களாக லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் குஜராத் அணி முதல் ஆளாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. மீதமுள்ள 3 இடங்களில் சென்னை, மும்பை, லக்னோ, பெங்களூரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. 


இதில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் சென்னை, லக்னோ அணிகள் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய மும்பை, பெங்களூரு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாது. காரணம் ரன் ரேட் அடிப்படையில் மும்பையை விட பெங்களூரு முன்னிலை வகிக்கிறது. இதனால் இரவு 7.30 மணிக்கு நடக்கும் பெங்களூரு - குஜராத் போட்டியின் முடிவுக்காக அந்த அணி காத்திருக்க வேண்டும்.


பெங்களூரு - குஜராத் போட்டி


இந்த சீசனில் பெங்களூரு - குஜராத் அணிகள் முதல் முறையாக மோதுகின்றது. பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்த குஜராத்துக்கு இது சம்பிரதாய ஆட்டமாக உள்ளது. அதேசமயம் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இப்போட்டியில் வெற்றி முக்கியம் என்பதால் பெங்களூருவுக்கு வாழ்வா? சாவா? ஆட்டமாக இந்த போட்டி மாறியுள்ளது. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்று வரை சென்று தோற்ற பெங்களூரு அணி இந்த முறை தன் ரசிகர்களுக்காக எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என முயற்சித்து வருகிறது. அதன் முடிவு இன்றைய போட்டியை பொறுத்தே உள்ளது. 


பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இப்போட்டியானது ஜியோ சினிமா செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் நேரலை செய்யப்படுகிறது. 


இதுவரை நேருக்கு நேர் போட்டிகள்


கடந்த சீசனில் தான் குஜராத் அணி அறிமுகமானது. அந்த சீசனில் பெங்களூரு குஜராத்துடன் 2 ஆட்டங்களில் மோதியது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. பேட்டிங், பந்துவீச்சில் பலத்துடன் திகழும் குஜராத் அணியை, டாப் 3 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஜொலிக்கும் பெங்களூரு எதிர்கொள்ள இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.