ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் தங்களது இறுதி லீக் போட்டியில் விளையாட உள்ளன.


16வது ஐபிஎல் சீசன்:


ஐபிஎல் திருவிழா பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 68 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 10 அணிகளில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மட்டுமே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் முட்டிமோதி வருகின்றன. பஞ்சாப், டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் தொடரிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் ஏதாவது அதிசயம் நடக்காதா என காத்திருக்கின்றன.  இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள கடைசி இரண்டு லீக் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தான், கடைசியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. 


மும்பை - ஐதராபாத் மோதல்:


மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய முதல் லீக் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன. 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள மும்பை அணி, இன்றைய போட்டியில் வென்றால் 16 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. ரன் ரேட் விகிதம் மைனஸில் இருப்பதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது.


குஜராத் - பெங்களூரு அணி மோதல்:


இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணியுமான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியின் முடிவு எதுவானாலும் குஜராத் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேநேரம், பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உள்ளூர் மைதானத்தில் போட்டி நடைபெறுவது, பெங்களூரு அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.


பெங்களூருவின் நிலை:


பெங்களூரு அணி தற்போது 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலே, புள்ளிப்பட்டியலில் நேரடியாக முதல் நான்கு இடங்களுக்குள் நுழைந்துவிடலாம். தோல்வியுற்றால் தொடரை விட்டு வெளியெற வேண்டியது தான். போட்டி பெங்களூருவில் உள்ள சின்ன்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளிலும் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் நிறைந்துள்ளதால், போட்டியின் முடிவை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.