ஐபிஎல் போட்டித் தொடர் கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டு உலகமே கவனிக்கும் வகையில் கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இயல்பாகவே கிரிக்கெட் போட்டியில் சில வரலாற்று நிகழ்வுகள் இதற்கு முன்னர் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும். அப்படியான ஒரு நிகழ்வு தான் நேற்று அதாவது ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியின் போது நடந்தது. 


அந்த போட்டியில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு காரணம். கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன் ரிங்கு சிங் தான். அந்த போட்டியில் மொத்தம் 21 பந்துகளைச் சந்தித்த ரிங்கு சிங் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை விளாசி 48 ரன்கள் எடுத்து இருந்தார். இதில் ரிங்கு சிங் சந்தித்த கடைசி 7 பந்துகளில் மட்டும் 40 ரன்கள் விளாசினார். மீதமுள்ள 14 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டும் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த போட்டியின் வெற்றிக் கொண்டாட்டத்திற்குப் பிறகு, கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா கூறியதாவது, ”ரிங்கு என்னிடம் வந்து எனது பேட்டை கேட்டார். ஆனால் நான் அவருக்கு தரவில்லை. இன்றைய போட்டியில் நானும் வேறு பேட் மாற்றி விட்டேன். எனது பழைய பேட்டை யாரோ மைதானத்திற்கு எடுத்து வந்து விட்டனர். ரிங்கு சிங் எனது பழைய பேட்டை எடுத்துக்கொண்டு விளையாடச் சென்றார். அவர் வெல்லும் போது இப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை. தற்போது இந்த பேட் ரிங்குவிற்கு சொந்தமானது” என்றார். 


இதேபோன்ற நிகழ்வு கடந்த 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெக்கான் சார்ஜஸ் அணிக்கும் இடையிலான போட்டியின் போது நடைபெற்றது. அந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என அனைத்தும் 119 ரன்களுக்குள் காலியாகிவிட்டது. அப்போது களத்திற்கு ஹர்பஜன் சிங் வந்தார். யாருமே எதிர்பார்க்காத ருத்ரதாண்டவ ஆட்டத்தினை ஹர்பஜன்சிங் ஆடினார். அவரது ஆட்டத்தினை கட்டுப்படுத்த முடியாமல், ஆடம் கில்கிரிஸ்ட் திகைத்தார். இந்த போட்டியில், ஹர்பஜன் சிங் 18 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 49 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதற்கு ஹர்பஜன் சிங் முக்கிய காரணமாக இருந்தாலும், அவரது ருத்ரதாண்டவ பேட்டிங்கிற்கு காரணத்தினை அவர் கூறும் வரை யாரும் அறிந்திருக்கவில்லை, ஹர்பஜன் கூறியதாவது, நான் களத்திற்கு வந்ததே எனது அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கருடையது தான். நான் பேட்டிங் செய்ய வரும் போது எனது அணிக்கு அதிப்படியான ரன்கள் தேவை என்பது தெரியும். எனது அதிஷ்டம் எல்லா பந்துகளும் பேட்டின் மைய்யப் பகுதியில் பட்டது என்றார். 


2010ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் ருத்ரதாண்டவமாடவும், 2023இல் ரிங்கு சிங் வானவேடிக்கை காட்டவும் சச்சின் மற்றும் ராணாவின் பேட்டிக்கு பங்கு உள்ளது என்பதை யாரும் மறக்க மாட்டார்கள்.