இந்தியன் பிரீமியர் லீக் 2023 இன் முதல் நாளில் ஆப் கிராஷ், பஃபரிங் பிரச்சனைகள் என பார்வையாளர்கள் புகார் கூறியதால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜியோ சினிமா சமூக ஊடகங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) பெரும் பின்னடைவைச் சந்தித்தது.


வயாகாம் 18 வாங்கிய டிஜிட்டல் உரிமம்


2023-2027 காலக்கட்டத்தில் டிஸ்னி ஸ்டார் மற்றும் வயாகாம்18 இடையே ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் உரிமைகள் பிரிக்கப்பட்டதன் மூலம், ஐபிஎல் இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த விளையாட்டாக மாறியது. ஐபிஎல் ப்ராட்காஸ்டிங் உரிமம் கடந்த வருடம் டெண்டர் விடப்பட்டபோது ஸ்டார் க்ரூப் ஓடிடி-யை எடுக்கத் தவறிய நிலையில் வயாகாம் 18 ஸ்டூடியோ வாங்கியது.


ரிலையன்ஸ் நிறுவனமான இது ஜியோ சினிமா ஆப் மற்றும் வெப்சைட்டில் நேரடியாக ஒளிபரப்பும் முடிவிற்கு வந்தது. ஆனால் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் க்ரூப் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. Viacom18 இன் OTT இயங்குதளமான JioCinema, போட்டியின் டிஜிட்டல் உரிமையை கடந்த ஆண்டு 23,758 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.










கண்கவர் விளம்பரம்


தொடர் தொடங்கும் முன்னர் பலவகையாக விளம்பரம் செய்த ஜியோ சினிமா ஆப், பல மொழிகளில், 4k தரத்தில் கிடைக்கும் என்று கூறியது. Viacom18 சமீபத்தில் IPL 2023 - WPL 2023 போலவே - JioCinema இல் இலவசமாகப் பார்க்கலாம் என்று அறிவித்தது. அதோடு கேமரா விருப்பத்தையும் மாற்றி பார்க்கக்கூடிய வசதிகளை வழங்குவதாக தெரிவிக்க இதற்கான எதிர்பார்ப்புகள் எகிறின. போட்டி தொடங்கிய நாளான நேற்று மட்டும் ஒன்றரை கோடி பேருக்கு மேல் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்ததாக அறிக்கைகள் சுட்டிக்காட்டின. ஒரே நாளில் அதிக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப்பாக அது உருவானது.














ட்ரெண்ட் ஆன ஜியோ கிராஷ்


முக்கியமான தொடரின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களில், #JioCrash என்ற ஹாஷ்டாகுடன் கூடிய ட்வீட்கள் வெளிவரத் தொடங்கின. அதில் பயனர்கள் IPLக்கான புதிய தளத்தில் தங்கள் பார்வை அனுபவத்தை விவரிப்பதைக் காண முடிந்தது. பலர் ஹாட்ஸ்டாருடன் ஒப்பிட்டு அந்த அனுபவத்தை தரவில்லை என்று புகார் எழுப்பினர். அடிக்கடி லோட் ஆவதால் மேட்ச் பார்க்கும் விருப்பமே போனதாகவும், மேட்ச் பார்க்க வேறு எதாவது வழி இருக்கிறதா எனவும் கேட்கும் டீவீட்கள் பறந்தன.










பதிலளித்த ஜியோ சினிமா


ஜியோ சினிமா, இந்த சிக்கல்கள் குறித்து புகார் அளித்த சில ட்வீட்களுக்குப் பதிலளித்தது, "இது உங்களுக்கு நாங்கள் தர விரும்பும் அனுபவம் அல்ல" என்று கூறியது. "இந்த விவகாரத்தில் நாங்கள் வருந்துகிறோம். நாங்கள் விரும்பும் அனுபவம் இதுவல்ல. இந்தச் சிக்கலைத் தீர்க்க எங்களுக்கு உதவ, உங்கள் OS, ஆப் பதிப்பு மற்றும் உங்கள் மொபைல் எண்ணின் விவரங்களை எங்களுக்கு அனுப்பவும். உங்கள் பொறுமையை நாங்கள் பாராட்டுகிறோம் & விரைவில் இதைத் தீர்ப்பீர்கள் என்று நம்புகிறோம்', என்று தெரிவித்தது.