பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மாவின் மோசமான சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
பெங்களூர் அணி வெளியேற்றம்
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளில் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டியை வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் விராட் கோலி அதிரடி சதமடிக்க, ஆர்சிபி அணி, 198 என்ற நல்ல இலக்கை நிர்ணயித்தது. இருப்பினும் பந்துவீச்சாளர்கள் சுப்மன் கில்லை நிறுத்த முடியாமல் திணற அவர் சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதோடு, பெங்களூரு அணியையும் வீட்டுக்கு அனுப்பினார்.
பெங்களூர் அணியின் பிரச்சனை
இந்த தொடர் முழுவதும் பெங்களூர் அணியில் இருந்து டு பிளஸிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல், சிராஜ் என்ற பெயர்கள் வெளியில் வந்தது, அதுவே அந்த அணிக்கு பிரச்சனையாகவும் அதுவே அமைந்தது. வேறு யாருமே அணியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த நிலையில் அணியே இந்த நான்கு பேரை மட்டும் நம்பி இருந்தது. குறிப்பாக மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக்கை மட்டுமே நம்பியிருந்த நிலையில், அவர் இந்த தொடர் முழுவதுமே சோதப்பியது பெரும் பின்னடைவாக அமைந்தது.
'டக்' ரெக்கார்டு
அதே போல கடைசி போட்டியிலும், 37 வயதான தமிழ்நாடு வீரர் தினேஷ் கா்த்திக், தான் சந்தித்த முதல் பந்திலேயே இடது கை வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாலின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி, கோல்டன் டக் ஆனார். ஐபிஎல் லீக் வரலாற்றில் இது அவரது 17வது டக் ஆகும். இதுவே ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் எடுத்த அதிக டக் ஆகும். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவை நேற்றைய டக் மூலம் மிஞ்சியிருக்கிறார். அவர் 16 டக் அவுட்களுடன் முன்னர் அவர்தான் முன்னிலையில் இருந்தார். அதே நேரத்தில் மந்தீப் சிங் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா 15 டக் அவுட்களுடன் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளனர்.
இந்த சீசனில் 4 வது டக்
குறிப்பாக தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த சீசனில் இது நான்காவது டக் ஆகும். இந்த ஆண்டு டாடா ஐபிஎல்-ல் இந்த சாதனையை வேறு எந்த பேட்ஸ்மேனும் செய்ததில்லை. பேட்டிங்கில் தனது மோசமான ஃபார்மைத் தொடரும் அவரை அடுத்த ஆண்டும் ஆர்சிபி அணி நம்பியிருக்குமா என்பது சந்தேகம்தான். முன்னாள் இந்திய கீப்பர் RCB க்கு ஒரு நம்பிக்கைக்குரிய ஃபினிஷராகப் 2022 ஆம் ஆண்டில் நன்றாக செயல்பட்டார். அதன்மூலம் இந்திய அணிக்கும் திரும்பிய அவர், அதன் பின் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த ஐபிஎல் சீசனில் தினேஷ் கார்த்திக் 13 இன்னிங்ஸ்கள் ஆடி, 11.67 என்ற சராசரியில் 140 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.