IPL 2023 Playoffs: இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்கியதும் சென்னை மெட்ரோ நிர்வாகம், சென்னை அணியின் போட்டி நாட்களில் போட்டிக்கான டிக்கெட்டுகள் வைத்திருப்பவரக்ள் மெட்ரோவில் பயணிக்க தனியாக டிக்கெட்டுகள் எடுக்க வேண்டாம் எனவும், போட்டிக்கான டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்கள் மெட்ரோவில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம் என அறிவித்திருந்தது. அதன்படி, போட்டி தினத்தன்று போட்டிக்கான டிக்கெட்டுகள் வைத்திருந்த ரசிகர்கள் மெட்ரோவில் பயணக் கட்டணம் செலுத்தாமல் பயணித்து வந்தனர். 


ப்ளே ஆஃப் போட்டி:


இந்நிலையில், சென்னையில் நாளை அதாவது மே 23ம் தேதி மற்றும் நாளை மறுநாள் இந்த ஆண்டுக்கான ப்ளே ஆஃப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம், ப்ளே ஆஃப் டிக்கெட்டுகள் வைத்திருந்தாலும், மெட்ரோ ரயிலில் பயணிக்க தனியாக பயணச் சீட்டு வாங்க வேண்டும் என கூறியுள்ளது. இனிமேல் ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகளைக் கொண்டு மெட்ரோவில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய முடியாது என கூறியுள்ளது. 


ப்ளே ஆஃப் சுற்றில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளன. நாளை மறுநாள் லக்னோ சூப்பர் ஜெயிண்டஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொள்கின்றன. 


குவாலிபையர்-1:


நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் முதல் குவாலிபையர் போட்டி நடைபெற உள்ளது. இதில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதேநேரம், தோல்வி பெறும் இரண்டாவது குவாலிபையர் போட்டியை விளையாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும். போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவது, சென்னை அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.


எலிமினேட்டர்:    


நாளை மறுநாள் சேப்பாக்கம் மைதானத்தில் எலிமினேட்டர் போட்டி நடைபெற உள்ளது.  புள்ளிப்பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்த, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இந்த போட்டியில் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வியுற்ற அணியுடன், இரண்டாவது குவாலிபையர் போட்டியில் விளையாடும். அதேநேரம் தோல்வியுற்ற அணி, தொடரிலிருந்து முழுமையாக வெளியேறிவிடும்.


குவாலிபையர் - 2:


வரும் 26ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரண்டாவது குவாலிபையர் போட்டி நடைபெற உள்ளது. இதில் குவாலிபையர்-1 போட்டியில் தோல்வியுற்ற அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற அணியும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.


இறுதிப்போட்டி:


இறுதியாக நடப்பு தொடரின் இறுதிப்போட்டி வரும் 28ம் தேதியன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் குவாலிபையர் 1 மற்றும் குவாலிபையர் 2 ஆகிய போட்டிகளில், வெற்றி பெற்ற அணிகள் மோத உள்ளன.