நடப்பு ஐ.பி.எல். தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணிகளில் ஒன்றாக பெங்களூர் உள்ளது. ஒவ்வொரு சீசனிலும் பெங்களூர் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருப்பது பவுலிங்கே ஆகும். இந்த சீசனிலும் அந்த சோகம் தொடர்கிறது. முகமது சிராஜ் தவிர அனைவரும் பந்துவீச்சில் சொதப்பி வருகின்றனர்.


பெங்களூர் அணியில் கேதர் ஜாதவ்:


பெங்களூர் அணிக்காக இந்த சீசனில் தொடக்க ஆட்டத்தில் டேவிட் வில்லி சிறப்பாக பந்துவீசினார். ஆனால், காயம் காரணமாக டேவிட் வில்லி இந்த சீசனில் இருந்து விலகினார். இதையடுத்து, அவருக்கு பதிலாக ஆர்.சி.பி. அணிக்காக கேதர் ஜாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தற்போது விலகியுள்ள டேவிட் வில்லி பந்துவீச்சாளர் மட்டுமின்றி பேட்ஸ்மேனும் ஆவார். இங்கிலாந்தைச் சேர்ந்த அவர் 4 ஆட்டங்களில் ஆடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில், அவருக்கு பதிலாக கேதர் ஜாதவ் பெங்களூர் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கடைசியாக சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய கேதர் ஜாதவை ஐதராபாத் அணி கழட்டிவிட்ட பிறகு  அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.


ஓரங்கட்டப்பட்ட ஜாதவ்:


இந்த நிலையில், காயத்தில் டேவிட் வில்லி விலகிய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அவர் தற்போது மாற்று வீரராக அழைக்கப்பட்டுள்ளார். கேதர் ஜாதவ் இதுவரை 93 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 4 அரைசதங்களுடன் 1196 ரன்கள் விளாசியுள்ளார். மேலும் 73 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 சதம், 6 அரைசதங்களுடன் 1389 ரன்களும், 9 டி20 போட்டிகளில் ஆடி 1 அரைசதத்துடன் 122 ரன்களும் விளாசியுள்ளார்.


கேதர் ஜாதவ் கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக ஐ.பி.எல். போட்டியில் களமிறங்கினார். அதன்பின்பு, 2 ஆண்டுகளாக ஐ.பி.எல். போட்டியில் அவர் களமிறக்கப்படவே இல்லை. ஐ.பி.எல். போட்டியில் 2010ம் ஆண்டு முதல் கேதர் ஜாதவ் ஆடி வருகிறார். கேதர் ஜாதவ் ஏற்கனவே 17 போட்டிகள் ஆர்.சி.பி. அணிக்காக ஆடியுள்ளார்.


கேதர் ஜாதவ் சென்னை அணிக்காக ஆடியபோது, சென்னை அணியின் மிக மோசமான தோல்விக்கு காரணம் என்று ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின்னர், அந்த சீசனுக்கு பிறகு நடந்த ஏலத்தில் அணியில் இருந்து கழட்டியும் விடப்பட்டார். பின்னர் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடியவர் அதன்பின்பு அங்கிருந்தும் கழட்டிவிடப்பட்டார்.


இரண்டு சீசன்களாக ஆடாத கேதர் ஜாதவ் பேட்டிங் மட்டுமின்றி சுழற்பந்துவீச்சாளரும் ஆவார். இரண்டு சீசன்களாக களமிறங்காத கேதர்ஜாதவ் மாற்று வீரராக சேர்க்கப்பட்டாலும், பெங்களூர் அணிக்காக களமிறக்கப்படுவாரா? அல்லது பெஞ்சிலே உட்காரவைக்கப்படுவாரா? என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருவேளை ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் தன் மீதான விமர்சனங்களுக்கு பேட்டால் கேதர் ஜாதவ்வால் பதில் அளிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


மேலும் படிக்க: RCB vs LSG: புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 ஆகுமா லக்னோ..? மிரட்டல் வெற்றி பெறுமா ஆர்.சி.பி..! ஐ.பி.எல். வரலாறு சொல்வது என்ன?


மேலும் படிக்க: RCB vs LSG: லக்னோவை பழிதீர்க்குமா பெங்களூர்..? வெற்றியை தொடருமா லக்னோ..? இன்று நேருக்கு நேர் மோதல்..!