ஐ.பி.எல். தொடரின் 15வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து வருகிறது. இதையடுத்து, சொந்த மைதானத்தில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது.
மிரட்டிய விராட், டுப்ளிசிஸ்:
இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய பெங்களூர் அணிக்கு விராட்கோலி மிரட்டலான தொடக்கத்தை அளித்தார். அவர் அதிரடியான தொடக்கத்தை தர அவருடன் மறுமுனையில் பேட்டிங்கில் ஆடிய கேப்டன் டுப்ளிசிஸ் அதிரடியில் மிரட்டினார்.
கேப்டன் இன்னிங்சை ஆடிய டுப்ளிசிஸ் விராட்கோலி அதிரடியாக ஆடும்போது அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். அதிரடி காட்டிய விராட்கோலி 4 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டான பிறகு மேக்ஸ்வேலுடன் டுப்ளிசிஸ் ஜோடி சேர்ந்தார்.
அவுட் ஆஃப் ஸ்டேடியம்:
மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்ந்த பிறகு டுப்ளிசிஸ் அதிரடியை இன்னும் அதிகரித்தார். பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய அவர் அரைசதம் விளாசி அசத்தினார். இதனால், பெங்களூர் அணியின் ரன் மின்னல்வேகத்தில் அதிகரித்தது, குறிப்பாக, இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் 15வது ஓவரை வீசினார். அவரது பந்தில் டுப்ளிசிஸ் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. இந்த சிக்ஸர் 115 மீட்டருக்கு சென்றது.
அதிரடி அரைசதம்:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக தூரத்திற்கு அடிக்கப்பட்ட சிக்ஸராக இந்த சிக்ஸர் பதிவானது. ஒரு முனையில் மேக்ஸ்வெல் அதிரடி காட்ட மறுமுனையில் டுப்ளிசிஸ் அதிரடி காட்ட பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் குழுமியிருந்த பெங்களூர் ரசிகர்கள் இன்பத்தில் துள்ளிக்குதித்தனர். மைதானம் முழுவதும் மேக்ஸ்வெல், டுப்ளிசிஸ் கரகோஷங்கள் எழுந்தது. மறுமுனையில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 24 பந்துகளில் அரைசதம் விளாசினார். மேக்ஸ்வெல் – டுப்ளிசிஸ் பார்ட்னர்ஷிப் 44 பந்துகளில் 100 ரன்களை விளாசினர். 20 ஓவர்கள் முழுவதும் பவுண்டரி, சிக்ஸர் விளாசிய மேக்ஸ்வெல், டுப்ளிசிஸ் அதிரடியால் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 211 ரன்களை குவித்தது. இறுதிவரை களத்தில் நின்ற டுப்ளிசிஸ் 46 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 79 ரன்களை விளாசினார்.
முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக வெற்றியும், 2வது போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியும் அடைந்த பெங்களூர் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது. இன்றைய ஆட்டத்தின் பிற்பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் இமாலய இலக்கை முன்கூட்டியே குவித்தால் வெற்றி பெறுவது எளிது என்பதால் ஆர்.சி.பி. அதிரடி காட்டியது.