டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில்தான் முடிந்தது. இந்த முறை இங்கிலாந்து அணி கோப்பை வென்றது. கிரிக்கெட் ரசிகர்களை அடுத்து மகிழ்விக்க ஐபிஎல் திருவிழா தயாராகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல்(IPL) தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளூர் மட்டுமின்றி சர்வதேச நட்சத்திர வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால், இதன் வியாபாரமும் பன்மடங்கு விரிவடைந்து, நாட்டின் பெரும் விளையாட்டு திருவிழாவாகவே ஐபிஎல் மாறியுள்ளது.
இந்தநிலையில், 2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த தகவல்களை கடைசி நாளான இன்று வெளியிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி, அந்த வகையில் சென்னை மற்றும் மும்பை அணிகள், தாங்கள் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ-யிடம் வழங்கி உள்ளது.
அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை முன்னிட்டு, வரும் டிசம்பர் மாதம் 23ம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது.
ரவிசந்திரன் அஷ்வின்:
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இல் சிறப்பாக செயல்படாத காரணத்திற்காக ஐபிஎல் 2023 ஏலத்திற்கு முன்னதாக ஆர் அஷ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஷ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியேற்றுவதன் மூலம், அவர்களின் தொகையில் ரூ. 4 கோடி பணம் சேரும். கடந்த பிப்ரவரியில் நடந்த ஏலத்தின்போது ரவிசந்திரன் அஷ்வினை டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணி வாங்க கடும் போட்டி போட்டது. இறுதியில், 5 கோடி ரூபாய்க்கு அஷ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.
கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பல வெற்றிக்கு அஷ்வின் மிக முக்கிய பங்கு வகித்தார். 17 போட்டிகளில் விளையாடிய அவர் 7.51 என்ற எகானமியுடன் 12 விக்கெட்களை கைப்பற்றினார். அதேபோல், 12 போட்டிகள் பேட்டிங் செய்து 191 ரன்களும் குவித்தார்.
டி20 உலகக் கோப்பையில் அஷ்வினின் பங்கு:
போட்டிகள் | எதிரணி | இடம் | ரன்கள் | விக்கெட்கள் | தேதி |
1 | பாகிஸ்தான் | மெல்போர்ன் | 1* | 0/23 | 23rd October |
2 | நெதர்லாந்து | சிட்னி | - | 2/21 | 27th October |
3 | தென்னாப்பிரிக்கா | பெர்த் | 7 | 1/43 | 30th October |
4 | வங்காளதேசம் | அடிலெய்டு | 13* | 0/19 | 2nd November |
5 | ஜிம்பாப்வே | மெல்போர்ன் | - | 3/22 | 6th November |
அரையிறுதி | இங்கிலாந்து | அடிலெய்டு | 0* | 0/27 | 10th November |
ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம்:
ஐசிசி டி20 பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் அஷ்வின் 5 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார். புவனேஸ்வர் குமார் அதே 12வது இடத்தில் நீடிக்கிறார். அர்ஷதீப் சிங் ஒரு இடம் முன்னேறி 23வது இடத்தை எட்டியுள்ளார். இவர்களை தவிர வேறு இந்திய பந்து வீச்சாளர்கள் யாரும் முதல் 39 இடங்களில் இல்லை. அக்சர் படேல் 6 இடங்கள் பின்தங்கி 40வது இடத்திற்கு சென்றார்.