ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் -  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது. 


16வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 44 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று நடக்கும் 45வது போட்டியில் சென்னை - லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றது. 


இந்த போட்டியானது பஞ்சாப் அணியின் உள்ளூர் மைதானமான  மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. 


இந்த ஐபிஎல் தொடரில்.. 


நடப்பு சீசனில் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.அதே சமயம் மும்பை அணி 8 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி, தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது. மேலும் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் இரு அணிகளும் இனி வரும் போட்டிகளில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வரலாறு சொல்வது என்ன? 


கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இருந்து இரு அணிகளும் விளையாடி வருகிறது. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் இரு அணிகளும் தலா 15 வெற்றிகளைப் பெற்று சமமாக உள்ளது. கடைசியாக கடந்த 6 மோதல்கலில்  பஞ்சாப் கிங்ஸ் அணி நான்கு முறை வென்றுள்ளது. நடப்பு சீசனில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியிருந்தது. 


மேலும் மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் இதற்கு முன்பு 8  முறை  மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடி உள்ளது. இரு அணிகளும் தலா 4 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் கடைசியாக 2019 ஆம் ஆண்டு விளையாடி இருந்தது. 


புள்ளி விவரங்கள் 


பஞ்சாப் அணி மும்பைக்கு எதிராக 230 ரன்களையும், மும்பை அணி பஞ்சாபிற்கு எதிராக 223 ரன்களையும் அதிகபட்சமாக பதிவு செய்துள்ளது. குறைந்தப்பட்சமாக பஞ்சாப் 119 ரன்களையும், மும்பை 87 ரன்களையும் பதிவு செய்துள்ளது. பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 9 முறையும், சேஸிங்கில் 6 முறையும் வென்றுள்ளது. இதேபோல் மும்பை அணி முதல் பேட்டிங்கில் 6 முறையும், சேஸிங்கில் 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.