IPL 2023 Punjab Kings Playoffs: ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் உள்ள அணிகளில் பஞ்சாப் அணியும் ஒன்று; ஆனால் அந்த அணி இதுவரை ஒரு முறைகூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.
பஞ்சாப் கிங்ஸ்:
ஐபிஎல் தொடரானது 2008 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் தொடங்கப்பட்டது. ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட காலத்தில் மற்ற கிரிக்கெட் வாரியங்களாலும் ஐபிஎல் போன்ற கிளப் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடருக்கு உள்ள வரவேற்பு போல் பெரிய வரவேற்பு மற்ற தொடர்களுக்கு கிடைக்கவில்லை.
ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது இருந்த அணிகளில் மிகவும் கவனிக்கப்பட்ட அணிகளில் ஒன்று , பஞ்சாப் அணி தான். அதற்கு காரணம் அந்த அண்இயின் உரிமையாளர் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா என்பது முக்கிய காரணமாக இருந்தது. இந்த பிம்பம் இதுவரை அப்படியேதான் உள்ளது. தொடக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரில் இருந்த பஞ்சாப் அணி கடந்த ஆண்டு முதல் தனது பெயரினை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றிக்கொண்டது.
ப்ளே ஆஃப் செல்லுமா?
இந்த அணி நிர்வாகத்தினைப் பொறுத்தமட்டில், ஏலத்தில் மிகவும் அதிரடியான வீரர்களை வாங்கி விடுவார்கள். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கூட அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட வீரரான சாம் கரன் பஞ்சாப் அணியில் தான் உள்ளார். இவரின் விலை ரூபாய் 18.50 கோடி. இப்படி அதிரடியான வீரர்களை தன்வசம் வைத்துக்கொள்ளும் பஞ்சாப் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இம்முறை ப்ளேஆஃப் செல்வதற்கான வாய்ப்புள்ள அணிகளில் பஞ்சாப் அணியும் உள்ளது. அந்த அணிக்கு உள்ள வாய்ப்புகள் என்னவென பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் தலைமையில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது (மே மாதம் 17) வரை 12 போட்டிகளில் விளையாடி அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் 6 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. மேலும், இந்த அணிக்கு 2 போட்டிகள் மீதமுள்ளன. 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு என்பது இதுவரை கிரீன் சிக்னலோடு தான் உள்ளது. ஆனால் அதற்கு பஞ்சாப் அணி மிக முக்கியமாக ஒரு சிலவற்றை செய்ய வேண்டியுள்ளது.
அதாவது இன்னும் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் (டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்) வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், பெங்களூரு அணி தனக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் (ஹைதராபாத் மற்றும் குஜராத்) தோல்வியைச் சந்திக்க வேண்டும். மும்பை அணி தனக்கு மீதமுள்ள ஒரு போட்டியிலும் தோல்வியைச் சந்தித்து ரன்ரேட்டில் பஞ்சாப் அணியை விட கீழே செல்ல வேண்டும். கொல்கத்தா அணி லக்னோவுக்கு எதிரான போட்டியில் தோல்வியைச் சந்தித்தால் பஞ்சாப் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.