ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி அணியை வீழ்த்தி 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதவி செய்தது. நேற்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் இடம்பெற்றது. 


மூன்று போட்டிகளில் முதல் வெற்றியை கண்ட மும்பை அணி, 2 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தை பிடித்தது. 4 போட்டிகளில் விளையாடி 4லிலும் தோல்வி கண்ட டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி இடத்தையும், 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றியுடன் ஹைதராபாத் அணி 9வது இடத்தையும் பிடித்தது. 


முதல் இடத்தில் யார்..? 


கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் +1.048 என்ற நிகர ரன் ரேட்டுடன் முதல் இடத்திலும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் +2.067 என்ற நிகர ரன் ரேட்டுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (3 போட்டிகளில் 4 புள்ளிகள்), NRR +1.375) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ( 3 போட்டிகளில் 4 புள்ளிகள்) , NRR +0.431) என்ற முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளனர். 


ஆரஞ்சு கேப் : 


பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் 3 போட்டிகளில் 225 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் 4 போட்டிகளில் 209 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். 


பர்பிள் கேப்:


ஐபிஎல் 16வது சீசனில் தற்போது வரை அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் லக்னோ வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 4 போட்டிகள் விளையாடி 9 விக்கெட்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியிம் ரஷித் கான் தலா 8 விக்கெட்களை வீழ்த்தி அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர். 


நேற்றைய போட்டி ஒரு பார்வை: 


ஐபிஎல் சீசனின் 16வது போட்டியில் நேற்று டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதியது. இரு அணிகளும் முதல் வெற்றியை பெற ஆர்வமாக இருந்தனர். முதலில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், டெல்லி அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டேவிட் வார்னர் 47 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, மனிஷ் பாண்டே ஓரளவு தாக்குபிடித்து 26 ரன்கள் அடித்தார். 


டெல்லி அணியின் துணை கேப்டன் அக்ஸார் பட்டேல்  25 பந்துகளில் 54 ரன்கள் குவிக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லி கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. 19.4 ஓவர்களில் டெல்லி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. 


173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் குவித்தனர். 26 பந்துகளில் 31 ரன்கள் அடித்த இஷான் ரன் அவுட் முறையில் வெளியேற, திலக் வர்மா தன் பங்கிற்கு 41 ரன்கள் குவித்து அவுட்டானார். 


நான்காவதாக உள்ளே வந்த சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல் முதலே பந்தே அவுட்டாகி நடையைக்கட்ட, கேப்டன் ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய டிம் டேவிர் மற்றும் கிரீன் கடைசி பந்து வரை எடுத்து சென்று மும்பை அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.