நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை வெற்றிக் கணக்கை தொடங்காத அணி என்றால் அது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார். 


அதன்படி டெல்லி அணியின் இன்னிங்ஸை கேப்டன் டேவிட் வார்னரும் ப்ரித்வி ஷாவும் தொடங்கினர். இருவரும் தொடக்கம் முதல் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். இந்த தொடர் முழுவதும் சொதப்பி வரும் ப்ரித்வி ஷா தனது விக்கெட்டை இழந்தார். பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட்டை இழந்து 51 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் வார்னருடன் மணீஷ் பாண்டே கைகோர்த்து அதிரடியாக ஆடினார். ஆனால் அவர் பியூஷ் சாவ்லா பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பினர். இதனால் ரன்ரேட் குறைந்தது. வர்னர் மட்டும் நிதானமாக ஆடினார். டெல்லி அணி 100 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 


இவருடன் இணைந்த அக்சர் பட்டேல் அதிரடியாக ஆட, டெல்லி அணியின் ரன் அதிகரிக்க தொடங்கியது. இறுதியில் அக்‌ஷர் பட்டேல் மற்றும் வார்னர் தங்களது விக்கெட்டை இழந்த பிறகு, டெல்லி அணியினர் மைதானத்திற்கும் பெவிலியனுக்கும் அணிவகுப்பு நடத்திய வண்ணம் இருந்தனர்.  மும்பை அணியின் சிறப்பான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாத டெல்லி அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பியூஷ் சாவ்லா, பெரண்டார்ஃப் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். 


அதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஓவரில் இருந்தே அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர். பவர்ப்ளே முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர்  இஷான் கிஷன் ரோகித் சர்மாவின் அவசரத்தால் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். 


அதன் பின்னர் திலக் வர்மா களத்திற்கு வர போட்டி சூடு பிடித்தது. இருவரும் பவுண்டரிகளை பறக்க விட ரன் மளமளவென உயர்ந்தது. ரோகித் சர்மா 29 பந்தில் அரைசதம் விளாசினார். 16வது ஓவரினை டெல்லி அணியின் இம்பேக்ட் ப்ளேயர் முகேஷ் குமார் வீசினார். அந்த ஓவரின்  ஐந்தாவது பந்தில் திலக் வர்மா தனது விக்கெட்டை 29 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்த பந்தில் சூர்ய குமார் யாதவ் டக் அவுட் ஆனார். 


17வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ரோகித் சர்மா 45 பந்தில் 65 ரன்கள் சேர்த்த நிலையில்  தனது விக்கெட்டை இழந்தார். இதனால் போட்டி கொஞ்சம் பரபரப்பானது. வெற்றி பெற  18 பந்துகளில் 26 ரன்கள் தேவைப்பட்டது.  இறுதி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் டிம் டேவிட்டும் கேம்ரூன் கிரீன் இருந்தனர். 20வது ஓவரின் இறுதி பந்தில்  மும்பை அணி 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்த சீசனில் மும்பை அணியின் முதல் வெற்றியாகும். 4 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.