ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் திருவிழாவின் லீக் போட்டிகள் நேற்று முன்தினம் (மே 21) முடிவடைந்தது. இதன் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதனைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுகள் இன்று தொடங்கியது. இதில் முதல் போட்டியாக தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது.
இந்த போட்டியில் லீக் போட்டிகளில் முதலிடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணியும், 2ஆம் இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங் செய்வதாக அறிவித்தார்.
172 ரன்களை குவித்த சென்னை அணி
இதனைத் தொடர்ந்து சென்னை அணி களம் கண்டது. தொடக்க வீரர்களாக களம் கண்ட ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே ஆகியோர் முதல் 10 ஓவர்களை விக்கெட் இழப்பின்றி கடந்தனர். இதில் ருதுராஜ் அட்டகாசமாக ஆடினார். அவர், 36 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் அரைசதம் எட்டிய நிலையில் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பின்னால் வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், 20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் முகம்மது ஷமி, மோகித் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், தர்ஷன் நல்கண்டே, ரஷித் கான், நூர் அகமது தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மிரட்டிய சென்னை.. விக்கெட்டை பறிகொடுத்த குஜராத்
தொடர்ந்து பேட் செய்த குஜராத் அணி, தொடக்கம் முதலே அடித்து ஆட நினைத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சஹா 12 ரன்களிலும், சுப்மன் கில் 42 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 8 ரன்களிலும், தசுன் ஷனகா 17 ரன்களிலும், டேவிட் மில்லர் 4 ரன்கள், ராகுல் திவேடியா 3 ரன்கள் என அடுத்தடுத்து அவுட்டாயினர். பின்னால் வந்த வீரர்களும் சொதப்ப இறுதியாக 20 ஓவர்களில் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதேசமயம் தோற்ற குஜராத் அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது. நாளை (மே 24) நடைபெறும் லக்னோ - மும்பை இடையேயான எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மே 26 நடைபெறும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் மோதும். இதில் வெற்றி பெறும் அணியே ஃபைனலுக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.