IPL 2023 Qualifier 1, GT vs CSK: ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முடிவுக்கு வரும் ஐபிஎல் தொடர்
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. ஒன்றரை மாதங்களாக களைக்கட்டிய ஐபிஎல் திருவிழாவின் லீக் போட்டிகள் நேற்று முன்தினம் (மே 21) ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 10 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் தொடரில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
இதனைத் தொடர்ந்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் தகுதிச்சுற்று போட்டிகளின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லீக் போட்டிகளில் முதலிடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணியும், 2ஆம் இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட்
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து பேட் செய்ய களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ருதுராஜ் கெய்க்வா, டெவன் கான்வே ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட தொடங்கினர். குறிப்பாக ருதுராஜ் குஜராத் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 36 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் அரைசதம் விளாசிய அவர், 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.
10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் எடுத்த சென்னை அணி ருதுராஜ் ஆட்டமிழந்த பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஷிவம் துபே ஒரு ரன்னிலும், டெவன் கான்வே 40 ரன்களிலும், ரஹானே, அம்பத்தி ராயுடு தலா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே களம் கண்ட கேப்டன் தோனி, ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆட்டத்தின் கடைசி பாலில் ஜடேஜா 22 ரன்களில் அவுட்டானார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் அதிகப்பட்சமாக முகம்மது ஷமி, மோகித் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 173 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியுள்ளது.