பஞ்சாப் அணியில் கடந்த சீசனில் தக்க வைக்கப்பட்ட ஓடின் ஸ்மித் (6 கோடி  ரூபாய்) மற்றும் ஷாருக் கான் (6 கோடி  ரூபாய்) ஆகியோரை விடுவிக்க பஞ்சாப் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டித் தொடர்களில் ஒன்றாக ஐ.பி.எல். திகழ்கிறது. டி20 போட்டித் திருவிழாவான இந்த ஐ.பி.எல். போட்டித் தொடரில் நடப்பாண்டில் 10 அணிகள் களமிறங்கின. அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்று அசத்தியது.


இந்த நிலையில், 2023ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது. குட்டி ஏலமாக நடைபெறும் இந்த ஏலத்தில் எந்தெந்த அணியினர் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களை தக்க வைக்கிறார்களோ, அவர்கள் தவிர அந்த அணியினரால் விடுவிக்கப்பட்ட வீரர்களை வைத்து ஏலம் நடத்தப்படும்.


ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் யார்? யார்? எனும் பட்டியலை வரும் 16-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ஏற்கனவே பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இதனால், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  






இந்த நிலையில், பஞ்சாப் அணியை பொறுத்தவரை கடந்த சீசன் தோல்விக்கு பிறகு மிகப்பெரிய திட்டத்தை வகுத்து வருகிறது. அதன் அடிப்படையில், மயங்கிற்கு பதிலாக அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானை கேப்டனாக நியமித்துள்ளது. தவான் சமீபத்தில் இந்தியாவிற்காக பல ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தவான் கடைசியாக இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். மயங்கை விட அதிக கேப்டன்சி அனுபவம் உள்ள தவான், பஞ்சாப் அணிக்கு சிறந்த கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


அதேபோல், கடந்த சீசனில் தக்க வைக்கப்பட்ட ஓடின் ஸ்மித் மற்றும் ஷாருக்கான் ஆகியோரை விடுவிக்கலாம் என தெரிகிறது. மேலும், பார்ம் அவுட்டில் உள்ள மயங்க் அகர்வாலையும் பஞ்சாப் அணி விடுவித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவிற்கு கடந்த சீசனில் மயங்க் அகர்வாலின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி விமர்சனத்திற்கு உள்ளானது. 


மேலும், பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளர் பெய்லிஸ் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன் மற்றும் சாம் கரன் ஆகிய இரு வீரர்களைக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த இருவரும் தற்போது ICC T20 உலகக் கோப்பை 2022 இல் சிறப்பாக விளையாடி வருகின்றனர். காயம் காரணமாக கர்ரன் கடைசி ஏலத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.