ஐபிஎல் தொடரில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் திரைநட்சத்திரங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.


16வது ஐபிஎல் தொடர்:


இன்று தொடங்க உள்ள 16வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி, நான்கு முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான, நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.


4 ஆண்டுகளுக்குப் பிறகு தொடக்க விழா:


தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, திரை நட்சத்திரங்களுடன் கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொடக்க விழா நடைபெறுவது, ஐபிஎல் தொடரில் வழக்கமாகும். ஆனால், கடந்த 2018ம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் தொடக்க விழா நடைபெறவில்லை. புல்வமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 2019ம் ஆண்டு தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 3 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தொடக்க விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதால், அகமதாபாத்தில் இன்று கோலாகலமாக ஐபிஎல் தொடக்க விழா, மாலை 6 மணியளவில் தொடங்க உள்ளது.


கலக்கப்போகும் திரைநட்சத்திரங்கள்:


தொடக்க விழாவில் பிரபல பாடகரான அர்ஜித் சிங் பல்வேறு பாடல்களை பாடி அசத்த உள்ளார். அதோடு, ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா பாட்டியா ஆகிய நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பிரபல இந்தி நடிகை கத்ரினா கைஃபும் நடனமாடுவார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடக்க விழாவில் பிசிசிஐ நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.  முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடக்க விழாவில், வருண் தவான், பிரபுதேவா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஹிருத்திக் ரோஷன், தமன்னா பாட்டியா மற்றும் மிகா சிங் என பலரது கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.


சென்னை - குஜராத் மோதல்:


கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து நடைபெற  உள்ள நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. ஏற்கனவே இந்த அணிகள் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இரண்டிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது. அதோடு, இந்த தொடர் தோனியின் கடைசி தொடர் என கூறப்படுகிறது.  இதனால், ஏற்கனவே பெற்ற தோல்விகளுக்கு பழிவாங்குவதோடு, நடப்பு தொடரை வெற்றியோடு தொடங்கவும் சென்னை அணி முனைப்பு காட்டி வருகிறது.