நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான தொடக்க நிகழ்ச்சி எங்கு? எப்போது? நடைபெறுகிறது என்பது உள்ளிட்ட மொத்த விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்:
இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த வீரர்களும் களமிறங்குவதால், ஐபிஎல் தொடர் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாப்படுகிறது. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் ஆன ஐபிஎல்-ன் 16வது தொடர், மார்ச் 31ம் தேதி தொடங்க உள்ளது. வழக்கம்போல் கடந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி முதல் போட்டியில் களமிறங்க உள்ளது. 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் அணி எதிர்கொள்ள உள்ளது.
எங்கு? எப்போது?
மார்ச் 31ம் தேதி மாலை 7.30 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், நடப்பு தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு பிரமாண்ட தொடக்க விழாவும் அங்கு நடைபெற உள்ளது. இதில் பல திரைப்பட நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதன்படி, ராஷ்மிகா மந்தனா, தமன்னா, கத்ரீனா கைஃப், டைகர் ஷெராஃப் மற்றும் அரிஜித் சிங் ஆகியோரின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேருக்கு நேர்:
இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய இரண்டு ஆட்டங்களிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் அணி வீழ்த்தியுள்ளது. கடந்த முறை குஜராத் அணி கோப்பையை வென்ற நிலையில், புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 9வது இடத்தை பிடித்தது.
மைதான விவரங்கள்:
கடந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மும்பை, புனே ம்ற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில் நடப்பாண்டில் ஒவ்வொரு அணியும் உள்ளூரில் 7 லீக் போட்டிகளிலும், எதிரணியின் மைதானங்களில் 7 லீக் போட்டிகளிலும் விளையாட உள்ளன. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 52 நாட்களில் 12 மைதானங்களில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறும்.
போட்டி விவரங்கள்:
மார்ச் 31ம் தேதி நடைபெறும் தொடரின் முதல் லீக் போட்டியில் குஜராத் அணி சென்னை அணியுடன் மோதுகிறது. மே 21ம் தேதி நடைபெறும் தொடரின் 70 ஆவது மற்றும் கடைசி லீக் போட்டியில் குஜராத் அணி பெங்களூருவை எதிர்கொள்கிறது. அதைதொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள், முதல் குவாலிபையர் போட்டியில் விளையாடும். 3 மற்றும் 4வது இடங்களை பிடித்த அணிகள் முதல் எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி, முதல் குவாலிபையரில் தோல்வியுற்ற அணியுடன் இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் மோதும். அதைதொடர்ந்து மே 28ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.