இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் தனது ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் என அந்த அணியின் மிடில் ஆர்டர் பேடஸ்மேன் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். 


ஐபிஎல் என்றாலே இரண்டு அணிகளின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது. அதில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றொன்று மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த இரு அணிகளும் இதுவரை நடந்துள்ள 15 சீசன்களில் மொத்தம் 9 கோப்பைகளை வென்றுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும் கோப்பையை வென்றுள்ளன.


கடந்த சீசன் இந்த இரு அணிகளுக்கும் மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 10வது இடத்திற்கும் சென்னை அணி 9வது இடத்திற்கும் தள்ளப்பட்டது.  இதற்கு இரு அணிகளின் மிகவும் மோசமான ஆட்டம் தான் எனலாம். அ


2023ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியானது சென்னை அணிக்கு வேறு மாதிரி இருக்கும் எனவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஐந்தாவது கோப்பையை வெல்லும் எனவும் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், நம்பிக்கை நட்சத்திரமுமாகிய 37 வயதான அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.


இது குறித்த வீடியோவை சென்னை அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அம்பத்தி ராயுடு, நிச்சயம் இந்த முறை சென்னை கோப்பையை வெல்லும். நாங்கள் கடந்த ஆண்டு மிகவும் மோசமான சீசனை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இம்முறைதான் ஐபிஎல் விளையாடும் உணர்வு ஒரு அணியாக எங்களுக்குள் வந்துள்ளது. அதற்கு காரணம் இம்முறை போட்டி சென்னையிலும் நடக்கவுள்ளது என்பது தான். மிகவும் மோசமான சீசனில் இருந்து நாங்கள் வந்துள்ளோம் என்பதாலே அது எங்களுக்கு மிகச்சிறந்த ஷாட்டுகளை அடிக்க வேண்டும் எனும் உத்வேகத்தினை எங்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது. 


மேலும், இம்முறை பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் அணியில் இணைந்து இருப்பது எங்களுக்கு கூடுதல் பலமாக உள்ளது. நாங்கள் இம்முறை நிச்சயம் எங்களது ஐந்தாவது கோப்பையை வெல்வோம்” இவ்வாறு அந்த வீடியோவில் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். சென்னை அணி ரசிகர்கள் தங்களது அணி வீரர்களுக்கு செல்லப் பெயர்களை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வகையில் அம்பத்தி ராயுடு பாகுபலி என அழைக்கப்படுகிறார். 


அம்பத்தி ராயுடு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். சென்னை அணிக்காக ஆவர் கடந்த 2018 முதல் விளையாடு வருகிறார். இதுவரை 188 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 4190 ரன்கள் குவித்துள்ளார். அதில் 22 அரைசதங்களும் ஒரு சதமும் விளாசியுள்ளார்.