ஒரே ஓவரில் 28 ரன்கள் குவித்து ஒரு ஓவர் முழுவதும் எல்லா பந்துகளையும் பவுண்டரிக்கு வெளியே விரட்டியோர் பட்டியலில் இணைந்துள்ளார் நிதிஷ் ராணா.
கொல்கத்தா - ஐதராபாத்
கடந்த வார த்ரில்லர்களில் இருந்து சற்று விலகி கடைசி பந்து பதற்றம் இன்றி முடிந்த போட்டியாக நேற்றைய போட்டி இருந்தது. ஆனாலும் கடைசி ஓவர் தொடக்கம் வரை அந்த பதற்றம் நீடித்தது. அதற்கு காரணம் ஐந்து சிக்ஸ் மன்னர், ஓவர்நைட் ஹீரோ ரிங்கு சிங்தான். அவர் நல்ல ஃபார்மில் களத்தில் இருந்தும் கச்சிதமாக பந்து வீசிய உம்ரான் மாலிக் கடைசி ஓவர் பதற்றத்திக்கு கொண்டு செல்லாமல் காப்பாற்றினார். ஆனால் அதுதான் உம்ரான் மாலிக் அந்த போட்டியில் வீசிய இரண்டாவது ஓவர் என்றால் நம்புவீர்களா. அதற்கு காரணம் ராணா. பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளையும் இழந்து 5 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் இருந்த கொல்கத்தா அணியின் ரன் வேகத்தை மீட்க ராணா தேர்வு செய்த ஓவர் 6. அந்த ஓவரை வீச வந்தவர் உம்ரான் மாலிக்.
நிதிஷ் ராணா - உம்ரான் மாலிக்
முதல் பந்து பவுன்சர் வீச அதில் புல் ஷாட் அடித்த ராணாவுக்கு சரியாக படாமல் பவுண்டரி எல்லைக்கு முன் விழுந்து பவுண்டரியைத் தொட முதல் பந்து 4 இல் தொடங்கியது. இரண்டாவது பந்து கிட்டத்தட்ட அதே போன்ற பந்து வீச, அதனை சரியாக டைம் செய்து அடித்து சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ராணா. அதன் பின்னர் கொஞ்சம் ஷார்ட்டாக வீச முயன்ற பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ராணா.இந்த ஓவரில் தரையோடு சென்ற ஒரே பந்தாக இது இருந்தது. அதன் பின் அடுத்த 2 பந்துகளையும் மீண்டும் தூக்கி அடிக்க அதுவும் ஆளில்லா இடத்தில் விழுந்து பவுண்டரிக்கு சென்றது. கடைசி பந்து ஒரு பெரிய சிக்ஸர் அடித்து அந்த ஓவரை முழுமையாக துவம்சம் செய்தார் நிதிஷ் ராணா.
கொல்கத்தாவின் ஒரே ஓவர் சாதனைகள்
கடுமையான அடியை வாங்கிய அவரது பந்துவீச்சை திரும்பவும் பயன்படுத்தவே இல்லை மார்க்கரம். ஆனால் கடைசி ஓவரை அவர்தான் வீசியாகவேண்டிய சூழலில் நேர்த்தியாக பந்து வீசி மீண்டும் நம்பிக்கையை பெற்றார். ஆனாலும் 6வது ஓவரில் அவர் காட்டிய அதிரடிக்கு பின்னர்தான் ஆட்டத்தில் கொல்கத்தா அணி ஆக்டிவ் ஆனது. அந்த ஓவரில் 28 ரன்களை குவித்து இந்த ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்தார். முதல் இடம் அனைவருக்கும் தெரியும், ரிங்கு சிங் செய்த மாயாஜாலம். அந்த ஓவரில் கொல்கத்தா அணி 31 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 28 ரன் ஓவர் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு ஓவர் முழுவதும் பவுண்டரிகளை அடித்த இந்திய வீரராக ராணா தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
ஓவர் முழுவதும் பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்த இந்தியர்கள்
2014இல் அவானா என்னும் பஞ்சாப் அணி பந்து வீச்சாளரின் ஓவரை துவம்சம் செய்த ரெய்னா அந்த ஓவரில் ஒரு நோபால் கூடுதலாக கிடைத்ததால் அதையும் பவுண்டரிக்கு அனுப்பி ஒரே ஓவரில் 7 பந்துகளை பவுண்டரிக்கு வெளியே அனுப்பிய பெருமையை பெற்றார். அந்த ஓவரில் அவர் 33 ரன்கள் எடுத்திருந்தார். சிவம் மாவி ஓவரில் ப்ரித்வி ஷா, சைமண்ட்ஸ் ஓவரில் சேவாக், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஓவரில் தினேஷ் கார்த்திக், அரவிந்த் ஓவரில் ரஹானே ஆகியோர் ஓவரின் எல்லா பந்துகளையும் பவுண்டரிக்கு வெளியே அனுப்பி உள்ளனர். அந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் நிதிஷ் ராணா.