ஐபிஎல் 2023 தொடரானது நாளை முதல் பிரமாண்டமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு மோத இருக்கின்றனர். 


ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனில் கடைசி இடத்தை பிடித்து லீக் சுற்றுகளில் இருந்து முதல் ஆளாக வெளியேறியது. இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா வருகிற ஐபிஎல் தொடரில் 3 முக்கியமான ரெக்கார்டுகளை படைக்க இருக்கிறார். அது என்ன என்ற பார்ப்போம். 


கடந்த 2008 ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரோகித் சர்மா, கடந்த 2013ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை 143 போட்டிகளில் கேப்டனாக இருந்து 79 வெற்றிகள் மற்றும் 60 தோல்விகளை சந்தித்துள்ளார். இதில், 5 கோப்பைகளும் அடங்கும். 


கேப்டன்ஷி:


ஐபிஎல்-லில் 150 போட்டிகளுக்கு மேல் தலைமை தாங்கியவர்கள் பட்டியலில் எம்.எஸ். தோனி 210 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் 143 போட்டிகளுடன் ரோகித் சர்மா இருக்கிறார். வரும் சீசனில் 7 போட்டிகளில் தலைமை தாங்கினால் 150 போட்டிகளில் தலைமை தாங்கிய பெருமை ரோகித் சர்மாவை சேரும். தோனிக்கு பிறகு 150 போட்டிகளில் கேப்டனாக இந்த சாதனையை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைப்பார். 


அதிக சிக்ஸர்கள்: 


சர்வதேச கிரிக்கெட்டில் 500க்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த பெருமையை பெற்றுள்ள ரோகித் சர்மா, ஐபிஎல் சீசனில் மற்றொரு குறிப்பிடத்தக்க சிக்ஸர் அடித்த சாதனையை படைக்க இருக்கிறார். 


தற்போது 240 சிக்ஸர்களுடன் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 357 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்திலும், 251 சிக்ஸர்களுடன் ஏபி டிவிலியர்ஸ் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன. 


வரும் தொடரில் வெறும் 12 சிக்ஸர்களை ரோகித் சர்மா அடித்தால் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் டிவிலியர்ஸை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவார். 


6,000 ஐபிஎல் ரன்கள்:


கடந்த 2008 ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரோகித் சர்மா, ஐபிஎல்லில் அதிக ரன்கள் எடுத்த முதல் ஐந்து வீரர்களில் ஒருவராக இருக்கிறார். ஒவர் இதுவரை 222 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5,879 ரன்கள் எடுத்து 4வது இடத்தில் இருக்கிறார். 


இதையடுத்து, ஐபிஎல்லில் 6,000 ரன்களை எடுப்பதற்கு இன்னும் 121 ரன்கள் மட்டும் தேவையாக உள்ளது. வரும் தொடரில் 6000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். விராட் கோலி (6,624), ஷிகர் தவான் (6,244) மட்டுமே இதுவரை லீக்கில் 6000 ரன்களை கடந்துள்ளனர்.