ஐ.பி.எல். தொடரில் எதிர்கொண்ட இரண்டு முறையும் சென்னை அணியை குஜராத் அணி எப்படி வீழ்த்தியது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
குஜராத்தின் வீறுநடை:
ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான முதல் தொடரிலேயே ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததோடு கோப்பையையும் வென்று அசத்தியது. லீக் போட்டியில் விளையாடிய 14 போட்டிகளில் அந்த அணி பத்து போட்டிகளில் வெற்றி பெற்றது. குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான 2 லீக் போட்டிகளிலும் குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தான், நடப்பாண்டு தொடரின் முதல் போட்டியிலேயே குஜராத் - சென்னை அணிகள் மோத உள்ளன. இதில் கடந்த 2 போட்டிகளிலும் பெற்ற தோல்விகளுக்கு சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே, கடந்த ஆண்டு சென்னை அணியை, குஜராத் அணி எப்படி 2 முறை வீழ்த்தியது என்பதை அறியலாம்.
சென்னை - குஜராத் முதல் மோதல்:
நான்கு முறை சாம்பியனான சென்னை அணியை, ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கடந்தாண்டு ஏப்ரல் 17ம் தேதியன்று குஜராத் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற அந்த அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 169 ரன்களை எடுத்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி, 48 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
மில்லரின் அதிரடி:
5வது விக்கெட்டிற்கு களமிறங்கிய மில்லர் தனி ஒரு நபராக, சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய மில்லர், 19.5வது பந்தில் குஜராத் அணிக்கு த்ரில் வெற்றியை பெற்று தந்தார். 51 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் 6 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உட்பட 94 ரன்களை சேர்த்தார். இதையடுத்து அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை - குஜராத் இரண்டாவது மோதல்:
சென்னை - குஜராத் இடையேயான இரண்டாவது லீக் போட்டி, மே 15ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை, 20 ஓவர்கள் முடிவில் 133 ரன்களை மட்டுமே எடுத்தது.
வெற்றியை பறித்த விரிதிமான் சாஹா:
இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடியது. சுழற்பந்து வீச்சை கொண்டு நெருக்கடி கொடுத்தாலும், விரிதிமான் சாஹா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இதனால், 19.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 137 ரன்களை எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்றது.
பழிதீர்க்குமா சென்னை?
இரு அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும், நூலிழையில் மட்டுமே சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், நடப்பாண்டில் முதல் போட்டியிலேயே சென்னை - குஜராத் அணிகள் மோத உள்ளன. இதனால், தொடரை வெற்றியுடன் தொடங்குவதோடு, தொடர் தோல்விகளுக்கு பழிவாங்கவும் சென்னை அணி முனைப்பு காட்டி வருகிறது.