கடந்த ஐபிஎல் 2022ம் தொடரில் ஏழாம் இடத்தை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது.  கடந்தாண்டு ஏலத்தின்போது கேகேஆர் அணி ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்கூசன், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த குர்பாஸ், ஷகிப் அல் ஹாசன், டேவிட் வைஸ் மற்றும் நாராயணன் ஜெகதீசன் போன்ற முக்கிய வீரர்களை எடுத்தது. 


கொல்கத்தா:


இதன்மூலம் இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி , இந்தாண்டு பலமிக்க அணியாக திகழ்ந்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்று நம்ப்படுகிறது. மேலும், கோப்பையை வெல்லவும் அதிக வாய்ப்புள்ளது. 


கேகேஆர் அணிக்கு மிகவும் பின்னடைவு என்றால் ஷ்ரேயாஸ் ஐயரின் காயம் மட்டுமே. தொடர்ந்து, நட்சத்திர ஆல் ரவுண்டரான ரஸல் பிட்னெஸ் குறித்தும் அணி நிர்வாகம் கவனித்து வருகிறது. இந்தநிலையில், கொல்கத்தா அணியின் பலம் மற்றும் பலவீனம் பற்றிய முழுவிவரங்களை இங்கு பார்க்கலாம். 


பலம்: 


கொல்கத்தா அணி கடந்த ஆண்டு பவர் பிளே ஓவரில் ரன்களை குவிக்க தவறியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கவுதம் காம்பீர் மற்றும் ராபின் உத்தப்பா எதிரணிகளை மிரட்டினர். அவர்களை தொடர்ந்து கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் கூட்டணியுன் ஒரு கலக்கு கலக்கியது. 


கடந்த ஆண்டு ஆரோன் பிஞ்ச் மற்றும் அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயருடன் இன்னிங்ஸைத் தொடங்கினார். ஆனால், இவர்கள் பெரியளவில் பவர் பிளேவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்தநிலையில், இந்த முறை நாராயண் ஜெகதீசன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் இருப்பதால், நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கலாம்.


ஜெகதீசன் ரன்களை சேர்ப்பதற்கு முன்பு நிலைத்து நின்று ஆடவே முயற்சி செய்வார். அதன் பிறகே அதிரடியில் மிரட்டுவர். ஆனால், குர்பாஸ் தொடக்கம் முதலே அதிரடியில் பின்னி எடுக்கும் திறமைசாலி. 21 வயதான குர்பாஸ் 124 டி20 போட்டிகளில் விளையாடி 150.24 ஸ்ட்ரைக் ரேட்டில் 3104 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சுனில் நரைன் அனுபவம்:


உலகம் முழுவதும் 439 டி20 போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றவர் சுனில் நரைன். இன்று வரையும் சூப்பர் ஓவரில் மெய்டன் செய்த பெருமை இவருக்கே உள்ளது. கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு சுனில் நரைன்  அதிக விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும், ரன்களை கட்டுப்படுத்தினார். 


ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய மூவரும் நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரும்பாலான போட்டிகளில் பினிஷிங் செய்யலாம். 


பலவீனங்கள்:


புதிய கேப்டன்: 


நிதிஷ் ராணா உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லிக்கு கேப்டனாக இருந்தாலும் , மிகப்பெரிய தொடரில் அவரது கேப்டன்ஷி எவ்வளவு தூரம் பிரதிபலிக்கும் என்பது தெரியவில்லை. கடந்த காலங்களில் எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் ஷர்மா எவ்வாறு செயல்பட்டார்களோ, அதேபோல், ராணாவின் திறமை என்ன என்பதை கிரிக்கெட் வாரியம் பார்க்கும். அது இந்திய அணியில் இவருக்கு எதிர்காலத்தையும் உருவாக்கலாம். 


காயம்: 


ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி மற்றும் லாக்கி பெர்குசன் போன்ற வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவர்கள் சில போட்டிகளில் விளையாடாமல் கூட போகலாம். 


கொல்கத்தா முழு அணி விவரம்:


நிதிஷ் ராணா (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் சிங், நயன் ஜாப்காவ், ரின்குல் ராய், ரிங்குடேஸ் அரோரா, சுயாஷ் சர்மா, டேவிட் வெய்ஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, மன்தீப் சிங், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், ஷ்ரேயாஸ் ஐயர் (சந்தேகம்)