நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை வெற்றிக் கணக்கை தொடங்காத அணி என்றால் அது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார். 


அதன்படி டெல்லி அணியின் இன்னிங்ஸை கேப்டன் டேவிட் வார்னரும் ப்ரித்வி ஷாவும் தொடங்கினர். இருவரும் தொடக்கம் முதல் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். இந்த தொடர் முழுவதும் சொதப்பி வரும் ப்ரித்வி ஷா தனது விக்கெட்டை இழந்தார். பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட்டை இழந்து 51 ரன்கள் சேர்த்தது. 


அதன் பின்னர் வார்னருடன் மணீஷ் பாண்டே கைகோர்த்து அதிரடியாக ஆடினார். ஆனால் அவர் பியூஷ் சாவ்லா பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பினர். இதனால் ரன்ரேட் குறைந்தது. வர்னர் மட்டும் நிதானமாக ஆடினார். டெல்லி அணி 100 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 


வார்னர் மட்டும் நிலைத்து நின்று விளையாடிக் கொண்டு இருந்தார். இவருடன் இணைந்த அக்சர் பட்டேல் அதிரடியாக ஆட, டெல்லி அணியின் ரன் அதிகரிக்க தொடங்கியது. நிதானமாக ஆடிவந்த வார்னர் தனது அரைசத்தினை 43 பந்தில் எட்டினார். அதிரடி காட்டிய அக்‌ஷர் பட்டேல் 22 பந்தில் தனது அரைசத்தினை எட்டினார். ஆனால் அவரும் 54 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழக்க, அடுத்து டேவிட் வார்னரும் அவுட் ஆனார். வார்னர் தனது விக்கெட்டை பறிகொடுத்த 19வது ஓவரில் மட்டும் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த ஓவரை வீசிய பெரண்டார்ஃப் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்த, ஒரு விக்கெட் ரன் - அவுட் முறையில் எடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் 200 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியினரால் டெல்லி அணி 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. கடந்த இரண்டு போட்டிகளில் மும்பை அணி மொத்தமாகவே ஐந்து விக்கெட்டுகள் தான் வீழ்த்தி இருந்தது. இதனல் மும்பை அணியின் பந்து வீச்சு விமர்சனத்துக்கு ஆளானது. 


இறுதியில் டெல்லி அணி 19.4  ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 172 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக வார்னர் 51 ரன்களும் அக்சர் பட்டேல் 54 ரன்களும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பியூஷ் சாவ்லா 4 ஓவர்கள் பந்து வீசி 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  பெரண்டார்ஃப் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.