IPL 2023 MI vs PBKS: வார இறுதியான இன்றைய தினத்தின் இரண்டாவது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதல் அடித்து ஆடியது. சிறிய மைதானமான வான்கடேவில் பவுண்டரிகளை விளாசுவதில் பஞ்சாப் அணியினர் குறியாக இருந்தனர். கேமரூன் க்ரீன் வீசிய மூன்றாவது ஓவரில் ஷார்ட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதற்கு பின்னரும் பஞ்சாப் அணி அதிரடியாக ஆடி வந்தது. பவர்ப்ளேவில் மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காத பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் 58 ரன்கள் சேர்த்து இருந்தது.
அதன் பின்னர் 7வது ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடி வந்த பிராப்சிம்ரனை வீழ்த்தினார். இந்த விக்கெட்டுக்குப் பின்னரும் பஞ்சாப் அணி சிறப்பாக ரன்கள் சேர்த்தது. ஆனால் அதன் பின்னர் 10வது ஓவரை வீசிய பியூஷ் சாவ்லா அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறப்பான பார்ட்னர்ஷிப்பில் இருந்த லிவிங்ஸ்டன் மற்றும் அதர்வாவை வெளியேற்றினார்.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி, அடுத்த நான்கு ஓவர்கள் மிகவும் மந்தமாக ஆடினர். 16வது ஓவரை வீசிய அர்ர்ஜுன் டெண்டுல்கரின் பந்து வீச்சின் முதல் பந்தினை சிக்ஸருக்கு விரட்டினார் சாம்கரன். அதன் பின்னர் அந்த ஓவரில் அதிகப்படியான லூஸ் பந்துகளை வீசினார். இதனால் அந்த ஓவரில் மட்டும் பஞ்சாப் அணி 31 ரன்கள் சேர்த்தது. இந்த ஓவரில் மட்டும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் ஒரு வைய்டு, ஒரு நோவ்-பால், ஒரு சிங்கிள் என மொத்தம் 31 ரன்கள் வாரி வழங்கினார். இதனால் 16 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எட்டியது.
இறுதி நான்கு ஓவர்களில் பஞ்சாப் அணி சிறப்பாக ரன்கள் சேர்த்தது. குறிப்பாக 18வது ஓவர் வீச்ய கேமரூன் கிரீன் 4 சிக்ஸர்களை வாரிக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் 180 ரன்கள் எடுக்குமா எனும் நிலையில் விளையாடிக் கொண்டு இருந்த பஞ்சாப் அணி கடைசி ஐந்து ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்தது. இதற்கிடையில் 26 பந்துகளில் சாம் தனது அரைசத்தினை எட்டினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெடுகளும், க்ரீன், அர்ஜுன் டெண்டுல்கர், ஆர்ச்சர், பெரண்டார்ஃப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.