நடப்புச் சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 


அதன்படி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. போட்டியின் இரண்டாவது ஓவரில் குஜராத் அணியின் சுப்மன் கில் குர்னல் பாண்டியா பந்து வீச்சில் டக்-அவுட் ஆகி வெளியேறினார். இது குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நேரத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தொடக்கத்தில் தடுமாறினார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் சஹா அதிரடியாக ஆடினார். பவர்ப்ளே முடிவில் 40 ரன்கள் எடுத்த குஜராத் அணி கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியபடி நிதான ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தது. குஜராத் அணியின் முதல் சிக்ஸர் 9வது ஓவரின் இறுதியில் தான் வந்தது. 


சிறப்பாக விளையாடி வந்த சஹா 37 பந்தில் 47 ரன்கள் சேர்த்த நிலையில் குர்னல் பாண்டியா பந்து வீச்சில் வெளியேறினார். தனது அனுபவ ஆட்டத்தால் லக்னோவுக்கு சவால் அளித்த அவர் தனது அரை சதத்தினை நழுவவிட்டார். அதன் பின்னர் வந்த அபினவ் மற்றும் விஜய் சங்கர் சொதப்பினர். இதனால் குஜராத் அணி 15 ஓவக்ரள் முடிவில் 94 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 


சுழற்பந்துக்கு சாதகமான இந்த மைதானத்தில் சூதானமாக ரன்கள் சேர்த்து வந்த ஹர்திக் பாண்டியாவுடன் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் கைகோர்த்தார். இருவரும் அதன் பின்னர் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் மேலும் நிதானமாக ஆடினர். அதன்18 ஓவரில் ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் ஆவர் 44 பந்தில் தனது அரைசத்தினை எட்டினார். ஆனால் 19வது ஓவரில் பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. இறுதில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்தது. 


அதன் பின்னர் களமிறங்கிய லைக்னோ அணி குஜராத் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. பவர்ப்ளேவில் 53 ரன்கள் சேர்த்த லக்னோ அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்த்தது. கடந்த போட்டியில் மிகவும் மோசமான பேட்டிங் என விமர்சிக்கப்பட்ட கே.எல் ராகுல் அதிரடியாக ஆடினார். இதனால் வெற்றி இலக்கினை நோக்கி லக்னோ அணி முன்னேறியது. ஆனால் ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் அரைசதம் கடந்து  கே.எல். ராகுல் நிதானமாக ஆடி வந்தார். இறுதி ஓவரில் 12 ரன்கள் தேவை என இருந்தது. ஆனால் 4 விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி  7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.